சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி…நடவடிக்கை எடுக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு

0
160

திருப்பதியில் காலணிகளுடன் நடமாட தடை செய்யப்பட்ட இடத்தில் நடிகை நயன்தாரா காலணி அணிந்து போஸ்ட் வெட்டிங் சூட்டில் கலந்துகொண்டது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி மலையில் சினிமா, சீரியல் ஆகியவற்றுக்கான படப்பிடிப்புகளை நடத்துவது, திறந்த வெளியில் வெட்டிங் சூட் நடத்துவது ஆகியவை போன்ற செயல்களுக்கு அனுமதி கிடையாது.

ஆனால் நேற்று திருமணம் ஆகி, இன்று திருப்பதி மலைக்கு வந்த நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதி இதுவரை யாரும் செய்யாத வகையில் முதன்முதலாக ஏழுமலையான் கோவில் முன் போஸ்ட் வெட்டிங் போட்டோ சூட் நடத்தியுள்ளனர்.ஏழுமலையான் கோவில் முன் உள்ள பகுதி, நான்கு மாட வீதிகள், லட்டு கவுண்டர், கோவில் திருக்குளம் ஆகிய இடங்களில் காலணிகளுடன் நடமாட யாருக்கும் அனுமதி கிடையாது.

ஆனால் காலணிகளுடன் நடமாட தடை விதிக்கப்பட்ட பகுதியான ஏழுமலையான் கோவில் முன்பகுதியில் நயன்தாரா காலணியுடன் சென்று போஸ்ட் வெட்டிங் ஷூட்டில் கலந்து கொண்டார். இதை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நயன்தாரா மட்டுமின்றி, புகைப்பட கலைஞர்களும் காலணி அணிந்து கோயில் ராஜகோபுரம் அருகே நின்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமணம் நல்ல நேரத்தில் நடைபெறாமல் குளிகையில் நடைபெற்றது. தங்களை திருமணத்திற்கு அழைக்கவில்லை என விக்னேஷ் சிவனின் பெரியப்பா குடும்பத்தினர் பேட்டி அளித்து பரபரப்பை கிளப்பி உள்ளனர். இந்த சமயத்தில் திருமணம் முடிந்த கையோடு சாமி தரிசனத்திற்காக திருப்பதிக்கு சென்ற இடத்திலும் இப்படி ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளனர்.