
பஞ்சாப், ஹரியானா பகுதியில் எரிக்கும் விவசாய குப்பைகளால் ஏற்படும் காற்று, பல்வேறு தொழில்துறை, உள்நாட்டு மற்றும் இதர நோக்கங்களுக்காக நிலக்கரி போன்ற அதிக மாசுபடுத்தும் எரிபொருட்களின் உமிழ்வுகள் இந்திய தலைநகர் டெல்லி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் காற்றின் தரம் சீரழிவதற்கு குறிப்பிடத்தக்க காரணியாக உள்ளது. தற்போதைய மதிப்பீட்டின்படி, தலைநகர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் ஆண்டுதோறும் 1.7 மில்லியன் டன் நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. அதைக் குறைக்கவே பல ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது. இயற்கை எரிவாயுவை பயன்படுத்தும் முறை அமலுக்கு வந்து, குழாய் வழியாக வீடுகளுக்கு விநியோகிக்கும் பணியும் நடை பெற்று வருகிறது.
கடந்த ஆண்டு ஆதித்யா துபே vs யூனியன் ஆஃப் இந்தியா வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, கட்டுமான நடவடிக்கைகள், போக்குவரத்து, நிலக்கரியால் இயங்கும் அலைகள் தான் தலைநகர காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன. காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான பரந்த நடவடிக்கைகளை ஆணையம் குறிப்பிடவில்லை என்று நீதிமன்றம் குற்றம் சாட்டியது. எனவே ஒரு நிபுணர் குழு உருவாக்கப்பட்டது. பொது மக்கள் மற்றும் நிபுணர்களிடமிருந்து ஆலோசனைகள் பெறப்பட்டு, அவற்றில் பெரும்பாலானவை தலைநகர் பகுதியில் நிலக்கரியை படிப்படியாக அகற்ற வேண்டும் என்று பரிந்துரைத்தன.
அதனடிப்படையில் , ஜனவரி 1, 2023 முதல் டெல்லி மற்றும் தேசியத் தலைநகர் முழுவதும் நிலக்கரி பயன்பாட்டைப் படிப்படியாக வெளியேற்ற காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (CAQM) உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே குழாய் மூலம் இயற்கை எரிவாயு(PNG) விநியோகம் செய்யப்படும் இடங்களில் நிலக்கரிப் பயன்பாட்டுத் தடை இந்தாண்டு அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும். குழாய் இயற்கை எரிவாயு உட்கட்டமைப்பு இல்லாத இடங்களுக்கு ஜனவரி 1, 2023 வரை கால அவகாசம் அளிக்கப்படுவதாக காற்றுத் தர மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் ஆராய்ச்சி மற்றும் நிர்வாக இயக்குநர் அனுமிதா ராய்சௌத்ரி, இந்த முடிவு “குறிப்பிடத்தக்கது” என்று பாராட்டியுள்ளார். அடுத்த ஐந்தாண்டு திட்டத்தில் நிலக்கரியை எரிபொருளாக பயன்படுத்துவதை அனைத்து துறைகளிலும் படிப்படியாக குறைக்க வேண்டும். மாற்று சக்திகளாக இயற்கை எரிவாயு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திகள் பயன்படுத்தப் பழக வேண்டும் என்றார். நிலக்கரி பயன்பாட்டை நிறுத்துவது ஒரே இரவில் நடக்காது என்பதால், ஒப்பீட்டளவில் குறைந்த சல்பர் டை ஆக்சைடு உமிழும் குறைந்த கந்தகத் தன்மை கொண்ட நிலக்கரியின் பயன்பாட்டிற்கு இப்போது தடை விதிக்கப்படவில்லை.இதனால் மாற்று சக்தி ஏற்பாடுகள் முடியும் வரை மாசு அளவு ஓரளவுக் கட்டுப்படுத்தப்படும்.