ஆசியாவிலேயே முதல் முறை… கஞ்சாவை பயன்படுத்த அனுமதி வழங்கிய தாய்லாந்து

0
290

ஆசியாவிலேயே முதன் முறையாக தாய்லாந்து நாட்டில் கஞ்சாவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. வலி மற்றும் சோர்வைப் போக்க கஞ்சாவைப் பயன்படுத்தும் பாரம்பரியத்தைக் கொண்ட தாய்லாந்து, மருத்துவ பயன்பாட்டிற்காகவும், விவசாயம் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கத்துடனும் கஞ்சா பயன்பாட்டை சட்டப்பூர்வமாக்கியுள்ளது.

இதுகுறித்து தாய்லாந்தின் சுகாதாரத் துறை அமைச்சர் அனுடின் சார்ன்விரகுல், கூறுகையில், “கஞ்சாவை சட்டப்பூர்வமாக உற்பத்தி செய்வது குற்றமில்லை. நாட்டின் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவ பயன்பாடுகளுக்கும், ஆரோக்கியத்திற்கும் மட்டுமே கஞ்சாவை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், பொழுதுபோக்கிற்காகவோ அல்லது பொது இடத்தில் பிறருக்கு பிரச்சனை தரும் வகையிலோ கஞ்சாவை பயன்படுத்த நினைத்தால் கடுமையான நடவடிக்கைகள் பாயும் என எச்சரித்துள்ள அனுடின் சார்ன்விரகுல், இந்த எச்சரிக்கை சுற்றுலா பயணிகளுக்கும் பொருந்தும் என அறிவுறுத்தியுள்ளார்.

அதேநேரம் போதைக்காக கஞ்சாவை பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்பதையும் தாய்லாந்து அரசு உறுதிபடுத்தியுள்ளது. போதைக்காக கஞ்சா தயாரிப்புகளை உருவாக்குவது, உற்பத்தி செய்வது, பயன்படுத்துவது ஆகியவற்றைக் கட்டுப்படுத்த கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட உள்ளன. மேலும் கஞ்சாவை போதைக்காக பயன்படுத்தினால், பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை மற்றும் பொது இடங்களில் கஞ்சா புகைப்பதற்காக 800 டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

கஃபேக்கள் மற்றும் உணவகங்களில் கஞ்சா உட்செலுத்தப்பட்ட உணவு மற்றும் பானங்களை வழங்கலாம், ஆனால் தயாரிப்புகளில் 0.2 சதவீதத்திற்கும் குறைவான டெட்ராஹைட்ரோகன்னாபினோல் (THC) இருக்க வேண்டும் என்றும், இது போதையை ஏற்படுத்தாத அளவு என்றும் தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது. கஞ்சாவை ஒரு பணப்பயிராக கருதும் தாய்லாந்து அரசாங்கம், அதன் சாகுபடியை மேற்கொள்ள விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக ஒரு மில்லியன் செடிகளை வழங்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 2 மில்லியன் டாலர்கள் அளவுக்கு வருமான ஈட்டலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

Previous articleஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டி – இலங்கை அணிக்கு அபராதம் விதிப்பு
Next articleடெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு… நிலக்கரிக்கு ஜனவரி மாதம் முதல் தடை