ஒரு கிலோ எடை குறைத்தால் ரூ.1,000 கோடி நிதி – 15 கிலோ குறைத்த எம்.பி.,

0
270

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி ஒருவர் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் பிட்னஸ் சவாலை ஏற்று தினமும் உடற்பயிற்சி செய்து வருகிறார். இவர் உடற்பயிற்சி செய்வது தனது உடல் நலனுக்காக மட்டுமல்ல, தொகுதி நலனுக்காகவும் தான்.

ஆம், இந்த சுவாரஸ்சிய சம்பவத்திற்கான விதை கடந்த பிப்ரவரி மாதம் தான் விதைக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மத்தியப் பிரதேசத்தில் ரூ.5,772 கோடி மதிப்பிலான நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைக்கும் விழாவில் பங்கேற்றுள்ளார். இந்த விழாவில் மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் தொகுதி மக்களவை உறுப்பினர் அனில் பிரோஜியாயும் பங்கேற்றார்.

இந்த விழா நிகழ்வின் போது தனது தொகுதிக்கு நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு எம்.பி அனில் இடம் அமைச்சர் நிதின் கட்கரி, ‘உங்களுக்கு நான் நிதி ஒதுக்குகிறேன். ஆனால், அதற்கு ஒரு கன்டிஷன் உள்ளது. நீங்கள் அதிக எடை கொண்டவராக உள்ளீர்கள். எனவே, நீங்கள் உடல் எடையை குறையுங்கள். ஒரு கிலோ எடையை நீங்கள் குறைத்தால் அதற்கு ரூ.1,000 கோடி நிதி தருகிறேன். எவ்வளவு குறைக்க முடியுமோ குறைத்து காட்டுங்கள்’ என்றுள்ளார்.

மத்திய அமைச்சரின் இந்த பிட்னஸ் சவால் எம்.பிக்கு முதலில் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், அதை ஏற்றுக்கொண்டு, உடனடியாக உடல் எடை குறைக்கும் வேலையை செய்யத் தொடங்கியுள்ளார். அமைச்சர் நிதின் கட்கரி சவால் விடுத்த போது இவர் 127 கிலோ எடை இருந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களில் தனது கடினமான முயற்சியால் சுமார் 15 கிலோ குறைத்துள்ளார் எம்.பி அனில் பிரோஜியா. தனது சவாலை நிறைவேற்ற உடல் பயிற்சி, யோகா, டயட் உணவு என பல விதமான யுக்திகளையும் இவர் கையாண்டுள்ளார். இதற்காக தனி பயிற்சியாளரையும் இவர் வைத்துள்ளார்.

சவால் குறித்து கூறிய எம்.பி அனில், “அமைச்சர் நிதின் கட்கரி சொல்வதை செய்து காட்டுபவர். இதுவரை உஜ்ஜைன் தொகுதிக்காக பிரதமர் மோடி உத்தரவின் பேரில் அமைச்சர் கட்கரி ரூ.6,000 கோடி தந்துள்ளார். தற்போது நான் அமைச்சர் கட்கரியின் சவாலை ஏற்று 15 கிலோ குறைத்துள்ளேன். எனவே, எனது தொகுகிக்கு அமைச்சர் ரூ.15,000 கோடி தருவார் என நம்புகிறேன். வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் இது குறித்து அமைச்சரிடம் பேசவுள்ளேன்” என்றார்.