விண்வெளி துறையில் தனியார் முதலீடு அதிகரிக்கப்படும் – பிரதமர் மோடி

0
226

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில், பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் நவ்சாரி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி அங்கு சென்றார். அப்போது, சிக்லி பகுதியில் பழங்குடியின மக்கள் மேளதாளங்கள் முழங்க அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.பின்னர், புட்வெல் கிராமத்தில் “குஜராத் கவுரவ் அபியான்” என்ற பேரணியில் பங்கேற்றார். அப்போது, நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, 3,050 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், சுதந்திரத்திற்குப் பிறகு நீண்ட காலம் ஆட்சியில் இருந்தவர்கள், பழங்குடியினர் வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியை குற்றம்சாட்டினார். அத்துடன், பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு முறையான சாலை வசதிகள் கூட செய்துதரப்படவில்லை என்று சாடினார். மேலும், தங்களைப் பொறுத்தவரை வாக்குகளைப் பெறுவதற்காகவோ, தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவோ வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கவில்லை என்றார். மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் மட்டுமே வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதாகவும் கூறினார்.

பின்னர் அகமதாபாத் சென்ற பிரதமர், இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தின் தலைமையகத்தை திறந்து வைத்தார். அப்போது பேசிய பிரதமர், இந்திய விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பு 2 சதவீதம் மட்டுமே உள்ளது என குறிப்பிட்டார். எனவே, தனியார் துறையினரின் பங்களிப்புடன் சர்வதேச விண்வெளித் துறையில் இந்தியாவின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்ய வேண்டியது அவசியம் என்று அவர் தெரிவித்தார். எனவே, தனியார் துறையின் பங்களிப்பை அதிகரித்து, விண்வெளி சுற்றுலா போன்றவை ஊக்குவிக்கப்படும் என அவர் கூறினார். விண்வெளித் துறையில் எளிதாக செயல்படும் வகையில், புதிய கொள்கையை விரைவில் வெளியிட உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Previous articleதமிழி கல்வெட்டு எழுத்து மற்றும் வாசிப்பு பயிலரங்கம்
Next articleஇந்தியாவில் 8000 ஐ தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு – கர்நாடகாவில் முகக்கவசம் கட்டாயம்