ரூபாய் நோட்டில் ஜிபிஎஸ் கருவியா…அமிதாப் பச்சன் நிகழ்ச்சியால் பதற்றம்

0
381

இந்தியாவின் பிரபலமான டிவி ஷோக்களில் ஒன்று குரோர்பதி நிகழ்ச்சி. அதன் 14வது சீசன் குறித்த ப்ரோமோவை சோனி டிவி வெளியிட்டுள்ளது. இந்த சீசனையும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனே தொகுத்து வழங்குகிறார். குரோர்பதி நிகழ்ச்சி புதிய சீசனாக வெளிவருவதும், மீண்டும் சின்னத்திரையில் அமிதாப் பச்சன் தோன்றுவதும் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்திருந்தாலும் அந்த ப்ரோமோ சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் இடையே பெருமளவில் பேசுபொருளாகியுள்ளது.

ஏனெனில், அந்த ப்ரோமோவில் ஹாட் சீட்டில் இருக்கும் போட்டியாளரிடம் “பின்வருனவற்றுள் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் எதில் இருக்கிறது எனக் கேட்டு டை ரைட்டர், டெலிவிஷன், சாட்டிலைட் மற்றும் 2000 ரூபாய் நோட்டு என 4 பதில்களை அமிதாப் கொடுத்திருந்தார்”. அந்த கேள்விக்கு சிறிதளவும் யோசிக்காமல் அந்த போட்டியாளர் 4வது பதிலான 2000 நோட்டில் தான் ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் இருக்கிறது எனக் கூறியதோடு, ஒட்டுமொத்த நாட்டுக்குமே தெரியும் 2000 ரூபாயில் நோட்டில்தான் ஜிபிஎஸ் இருக்கிறது என கூறினார்.

தவறான பதில் என அமிதாப் கூற அதற்கு அந்த பெண் போட்டியாளர் என்னை ஏமாற்றுகிறீர்களா? ரூபாய் நோட்டில் ஜி.பி.எஸ் இருக்கிறது என நான் கேள்விப்பட்டிருக்கிறேன் என தெரிவித்தார். அதற்கு பார்வையாளர் பக்கம் திரும்பிய அமிதாப், “உண்மைத் தன்மையற்ற செய்திகளை எப்போதும் நம்பாதீர்கள்” எனக் கேட்டுக்கொண்டார். இந்த ப்ரோமோ வீடியோவை சோனி டிவி தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில், இது போன்று வதந்திகளை நம்புவோரை டேக் செய்து, முதலில் அறிவை சேகரித்துக்கொள்ளுங்கள் என சொல்லுங்கள் என பதிவிட்டு விரைவில் குரோர்பதி 2022 ஒளிபரப்பப்படும் என குறிப்பிட்டுள்ளது. 2 லட்சத்துக்கும் மேலானோரால் பார்க்கப்பட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி சமூக வலைதள பயன்பாட்டாளர்களின் கிண்டலுக்கும், விமர்சனத்துக்கும் ஆளாகியுள்ளது. முன்னதாக, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு 2000 ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்ட போது அதில் ஜி.பி.எஸ் பொருத்தப்பட்ட சிப் இருக்கிறது என பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களும், வலதுசாரிகள் பலரும் பரப்பிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Previous articleகேலி செய்த இளைஞரை கன்னத்தில் அறைந்த பெண்ணுக்கு நேர்ந்த கோர சம்பவம்
Next articleசர்வதேச அளவில் தயாராகப் போகும் சூர்யாவின் 2 படங்கள்