கேலி செய்த இளைஞரை கன்னத்தில் அறைந்த பெண்ணுக்கு நேர்ந்த கோர சம்பவம்

0
412

மத்தியப் பிரதேசத்தில் இளைஞர்களால் தாக்கப்பட்ட பெண் ஒருவரின் முகத்தில் 118 தையல்கள் போடப்பட்டுள்ளன. போபால் நகரின் டி.டி நகர்ப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் சந்தைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த இளைஞர்களுடன் பைக் பார்க்கிங் தொடர்பாக தம்பதியர் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இளைஞர்கள் அப்பெண்ணை கேலி செய்துள்ளனர். அந்த பெண்ணிடம் ஆபாசமான கருத்துகளை கூறி விசில் அடித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அவர், அந்த இளைஞர்களில் ஒருவரை கன்னத்தில் அறைந்துள்ளார். பின்னர் தம்பதியினர் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் அப்பெண்ணின் முகத்தில் பிளேடால் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் முகத்தில் 118 தையல்கள் போடப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பாக பாட்ஷா பேக் மற்றும் அஜய் என்ற பிட்டி சிப்டே என்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மூன்றாவது குற்றவாளியைப் பிடிக்க தேடுதல் நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இன்று காலை தம்பதியரை நேரில் சந்தித்து மருத்துவ சிகிச்சைக்கு முழு உதவி செய்வதாக உறுதியளித்தார். அந்தப் பெண்ணின் துணிச்சலைப் பாராட்டி அவருக்கு ரூ. 1 லட்சத்தை முதல்வர் சவுகான் வழங்கினார். அந்தப் பெண் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார் என முதல்வர் சவுகான் கூறினார். “குற்றவாளிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.

Previous articleபாண்டியர்கள், சோழர்கள், பல்லவர்களை வரலாற்று ஆசிரியர்கள் புறக்கணித்தது ஏன்?
Next articleரூபாய் நோட்டில் ஜிபிஎஸ் கருவியா…அமிதாப் பச்சன் நிகழ்ச்சியால் பதற்றம்