பெண்களை வேலைக்கு செல்ல கட்டாயப்படுத்த முடியாது

0
429

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பெண்ணுக்கு மாதம் தோறும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்ற புனேவில் உள்ள குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஒரு நபர் தாக்கல் செய்த சீராய்வு மனுவை நீதிபதி பாரதி டாங்ரே தலைமையிலான ஒற்றை பெஞ்ச் விசாரித்தது. வெள்ளிக்கிழமை விசாரணையின் போது, ​​​​ஒரு பெண் தகுதி மற்றும் கல்விப் பட்டம் பெற்றிருந்தாலும் “வேலை செய்ய அல்லது வீட்டில் தங்குவதற்கான விருப்பம் அவர்களை மட்டுமேச் சார்ந்தது. அவர்களை யாரும் வேலைக்கு செல்லக் கட்டாயப்படுத்த முடியாது ” என்று நீதிமன்றம் கூறியது.

புனேவில் ஒரு தம்பதி சில மாதங்களுக்கு முன் விவாகரத்து பெற்றனர். விவகாரத்து வழக்கின் தீர்ப்பில் கணவன், தன் மனைவிக்கு ஜீவாம்சமாக மாதம் 5000 ரூபாயும், அவரது 13 வயது மகளின் பராமரிப்பு செலவிற்கு மாதம் 7000 ரூபாயும் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து கணவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு போட்டார். அந்த வழக்கு கடந்த வெள்ளி அன்று பாரதி தாங்கரே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனைவி படித்திருக்கிறார். நிரந்தர வருமானம் வருகிறது. எதற்கு நான் காசு தர வேண்டும்? அவரே வேலைக்கு போகலாம்.சம்பாதித்து அவர் செலவுகளைப் பார்த்துக்கொள்ளலாம் என்ற வாதத்தை வைத்தார் கணவர் தரப்பு வழக்கறிஞர் அஜிங்க்யா உதனே. அதற்கு பதிலளித்த நீதிபதி,”வீட்டு நிதித் தேவைக்கு பெண்கள் பங்களிக்க வேண்டும் என்பதை நம் சமூகம் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. வேலை செய்வது ஒரு பெண்ணின் தனிப்பட்ட விருப்பம். யாராலும் அவரை வேலைக்குச் செல்லும்படி கட்டாயப்படுத்த முடியாது. அவள் பட்டதாரி என்பதால் அவள் வீட்டில் உட்காரக் கூடாது என்று அர்த்தமல்ல” என்று கூறினார்.

“இன்று நான் இந்த நீதிமன்றத்தின் நீதிபதியாக இருக்கிறேன். நாளை நான் வீட்டில் உட்காரலாம் என்று வைத்துக்கொள்வோம். அப்போது நான் நீதிபதியாக இருக்கத் தகுதியானவள், வீட்டில் உட்காரக் கூடாது என்று சொல்வீர்களா?” என்ற கேள்வியும் எழுப்பினார். இந்த வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது. மும்பை உயர் நீதிமன்றத்தின் இந்த வாதம் சமூகத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Previous articleமுடிவுக்கு வந்தது பிரான்ஸ் உடனான நீர்மூழ்கி கப்பல் விவகாரம்…ஆஸ்திரேலியா எடுத்த அசத்தல் முடிவு
Next articleபாண்டியர்கள், சோழர்கள், பல்லவர்களை வரலாற்று ஆசிரியர்கள் புறக்கணித்தது ஏன்?