ஆஸ்திரேலியாவில் நீடித்த நிலைத்திருக்கக்கூடிய விமானப் போக்குவரத்து எரிபொருள் துறையை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்காக, 200 மில்லியன் டொலர் வரையிலான முதலீட்டுத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. Qantas, Airbus விமான நிறுவனங்கள் தங்களது பருவநிலை மாற்றம் தொடர்பான திட்டங்களை முடுக்கிவிட முற்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நிதி புதிய நிறுவனங்களுக்கும் வெற்றிகரமாகச் செயல்படும் நிறுவனங்களுக்கும் பயன்படுத்தப்படலாம்.
நீடித்து நிலைத்திருக்கக்கூடிய எரிபொருள் துறையின் ஆகப்பெரிய வாடிக்கையாளராக இருந்தவாறே முதலீடு செய்வது சிறந்த முடிவு என்று Qantas நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அலன் ஜாய்ஸ் தெரிவித்துள்ளார்.
ஏனைய நிறுவனங்களும் உற்பத்தியாளர்களும் தங்களது பசுமையான எரிபொருள் திட்டங்களோடு முன்வருமாறு அவர் கேட்டுக்கொண்டார். 2050ஆம் ஆண்டுக்குள் கரியமிலவாயு வெளியேற்றத்தை முற்றாகக் குறைக்க உலகின் விமானத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.
நீடித்து நிலைத்திருக்கக்கூடிய விமான எரிபொருளின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் அந்தக் கடப்பாட்டை நிலைநிறுத்த முடியும் என்று Airbus விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.
இரு நிறுவனங்களுக்கும் இடையிலான பங்காளித்துவம், ஐந்தாண்டுகளுக்கு மேல் நீடிக்கத் திட்டம் வரையப்பட்டுள்ளது.