
ஆப்கானிஸ்தானில் நேற்று நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பாக்திக்கா மற்றும் கோஸ்ட் என்ற நகரத்தின் அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் மற்றும் பாகிஸ்தான் நகரங்களிலும் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் சுமார் 90 வீடுகள், வசிப்பிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இந்த சம்பவத்தில் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். நிலநடுக்கம் நிகழ்ந்த இடங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறியுள்ள தாலிபான் அரசின் பேரிடர் துறை அமைச்சர் முகமது நசிம் ஹக்கானி இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைவரும் திரண்டுவந்து உதவ வேண்டும் என அரசின் செய்தி தொடர்பாளர் பிலால் கரிமி கூறியுள்ளார்.
இந்த நிலநடுக்கம் சுமார் 500 கிமீ சுற்றளவுக்கு உணரப்பட்டதாகவும், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மட்டுமல்லாது இந்தியாவின் சில பகுதிகளிலும் இது உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெராஷ் ஷெரிப், தங்களால் இயன்ற உதவியை வழங்குவோம் என உறுதியளித்துள்ளார். தாலிபான் ஆட்சிக்குப் பின் ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ள நிலையில், இந்த பேரிடர் சம்பவம் அவர்களுக்கு மேலும் ஒரு சுமையாக ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ உலக சுகாதார அமைப்பு களத்தில் இறங்கியுள்ளது.
இந்துகுஷ் மலைத்தொடரைக் கொண்ட ஆப்கானிஸ்தானில் இதுபோன்ற நிலநடுக்கம், நில அதிர்வு சம்பவங்கள் தொடர்ந்து ஏற்படுகின்றன. 2015ஆம் ஆண்டு அந்நாட்டின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2002ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,000க்கும் மேற்பட்டோரும், 1998ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4,500க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்துள்ளனர்.