உக்ரைன் போர் ஆண்டுக்கணக்கில் நீடிக்கும் – நேட்டோ தலைவர் எச்சரிக்கை

0
223

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பிப்ரவரி 24 உக்ரைன் நாட்டின் மீது போர் அறிவித்து ராணுவ நடவடிக்கை மேற்கொண்டார். ரஷ்யாவின் இந்த திடீர் போர் தாக்குதல் நான்கு மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த போர் அந்த பிராந்தியத்தில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த ஐரோப்பிய கண்டத்தையே சலசலக்க வைத்துள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது அச்சுறுத்தும் விதமாக ரஷ்யா தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த காரணத்தால், தன்நாட்டின் பாதுகாப்பு நலன் கருதி அமெரிக்க – ஐரோப்பிய கூட்டமைப்பான நேட்டோவில் இணைய உக்ரைன் முடிவெடுத்தது. இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்த சூழலில் தான் அதிபர் புதின் இந்த போர் நடவடிக்கைகளை மேற்கொண்டார். உக்ரைன் நேட்டோ படைகளில் இணைவது ரஷ்யாவுக்கு அச்சுறுத்தலாக அமைந்து விடும் என்ற புகாரில் புதின் தனது போரை நியாயப்படுத்தியுள்ளார்.

உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் நேட்டோ படைகள் ஆயுத மற்றும் பொருளாதார உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றன. இந்நிலையில், இந்த போர் குறித்து நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோலின்பெர்க் முக்கிய கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் ஜெர்மனியைச் சேர்ந்த தினசரி நாளேடான பில்ட்க்கு அளித்த பேட்டியில், “இந்த போர் ஆண்டு கணக்கில் நீட்டிக்க வாய்ப்புள்ளது. அதற்கு நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும். உக்ரைனுக்கு தேவையான உதவிகளை நாம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். ராணுவ உதவிகள் மட்டுமல்லாது எரிபொருள் மற்றும் உணவு பொருள் உதவிகளையும் நாம் வழங்க வேண்டும். செலவுகள் அதிகம் ஏற்பட்டாலும் உக்ரைன் பலவீனம் அடைய நாம் விடக் கூடாது.

ஒருவேளை, புதினின் திட்டம் வெற்றி பெற்றால், இதை விட அதிக விலையை நாம் தர வேண்டிய சூழல் ஏற்படலாம்” என அவர் எச்சரித்துள்ளார். போரை எதிர்கொள்ளும் உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் 50 நாடுகளின் தலைவர்களை சந்தித்து பாதுகாப்பு தளவாடங்கள், ஆயுதங்களை வழங்க கோரிக்கை வைத்துள்ளார்.

Previous articleஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 1000 ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை
Next articleபொன்னியின் செல்வன் டீசரை தஞ்சாவூரில் வெளியிடும் திட்டம் கைவிடப்பட்டது