ஊழியரின் வங்கி கணக்கில் தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்… தலைமறைவான ஊழியர்

0
265

சிலி நாட்டில் உள்ள ஒரு நிறுவனம் தனது ஊழியர் ஒருவருக்கு தவறுதலாக சம்பளமாக ரூ.1.4 கோடி செலுத்தியுள்ளது. இதை ரகசியமாக வைத்திருந்த ஊழியர் ராஜினாமா செய்து விட்டு தலைமறைவாகி விட்ட நிலையில் நிறுவனம் அளித்த புகாரில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் தென் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டில் இயங்கி வரும் மிகப்பெரிய உணவு உற்பத்தி நிறுவனமான சியால் நிறுவனத்தில் (Consorcio Industrial de Alimentos – Cial) அரங்கேறியுள்ளது. அந்த நிறுவனத்தில் 4,95,980 சிலி பெசோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.43 ஆயிரம்) மாதச் சம்பளத்திற்கு ஊழியர் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். கடந்த மாதம் அவருக்கு மாதச் சம்பளம் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட மெசேஜைப் பார்த்து ஊழியர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஏனென்றால் அவருக்கு அம்மாத சம்பளமாக 165,398,851 சிலி பெசோக்களை நிறுவனத்தில் தரப்பில் செலுத்தப்பட்டிருந்தது. இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1.42 கோடி செலுத்தப்பட்டிருந்தது. வழக்கமான சம்பளத்தை விட 286 மடங்கு அதிகமான தொகை தனது வங்கிக் கணக்கிற்கு வந்ததைப் பார்த்து ஆனந்தமடைந்த அவர் சக ஊழியர்கள் யாரிடமும் இது குறித்து தகவல் தெரிவிக்கவில்லை. பணம் செலுத்துவதில் ஏற்பட்ட பிழையைப் புகாரளிக்க, ஊழியர் மனிதவளத் துறையின் துணை மேலாளரை தொடர்பு கொண்டார். நிறுவன நிர்வாகம் அவர்களது பதிவேடுகளை சரிபார்த்து, அந்த ஊழியரின் மாதச் சம்பளத்தில் சுமார் 286 மடங்கு சம்பளம் தவறுதலாக வழங்கப்பட்டதை உறுதி செய்தது. பணியாளரிடம் கூடுதலாக செலுத்திய பணத்தை திரும்பக் கேட்டது நிர்வாகம்.

ஊழியரும் தனக்கு அதிகமாகச் செலுத்திய தொகையைத் திருப்பித் தர வங்கிக்குச் செல்ல ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவர் பணத்தைத் திருப்பித் தர விரும்பவில்லை. அலுவலகத்திற்கு வருவதை ஊழியர் திடீரென நிறுத்தினார். இதனால் அதிர்ச்சியடைந்த நிர்வாகத்தினர் ஊழியரை தொடர்பு கொள்ள முயன்றனர. ஆனால் அவர்களின் செய்திகளுக்கு ஊழியர் பதிலளிக்கவில்லை. பின்னர் ஊழியர் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு, தான் அதிகமாக தூங்கிவிட்டதாகவும், வங்கிக்கு வருவேன் என்றும் கூறினார். எனினும், ஜூன் 2ஆம் தேதி அவர் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துவிட்டு தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஊழியர் மீது நிர்வாகம் போலீசில் புகார் அளித்துள்ளது. வழக்குப்பதிவு செய்த சிலி போலீசார் அவரை தற்போது தேடி வருகின்றனர்.

Previous articleஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு
Next article‘வெள்ளத்தைத் தாங்கும்’ மிதக்கும் வீடுகளைக் கண்டுபிடித்துள்ள ஜப்பான் நிறுவனம்