காலரா நோய் பரவல் காரணமாக புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இன்று முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் உத்தரவிட்டுள்ளார்.
காரைக்காலில் கடந்த சில வாரங்களாக வாந்தி, வயிற்றுப்போக்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதையடுத்து, மாவட்ட நிா்வாகம் சாா்பில், குடிநீா் எடுக்கும் பகுதி, குடிநீா் தொட்டி மூலம் விநியோக்கும் பகுதி, குடியிருப்புகளுக்கு குடிநீா் குழாய் செல்லும் பகுதிகள் ஆய்வுசெய்யப்பட்டது. தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிலரையும் பரிசோதித்த நிலையில், அது காலராவுக்கான அறிகுறியாக தெரியவந்தது.
இதையடுத்து, காரைக்கால் மாவட்டத்தில் காலரா தொற்று அதிகரிப்பு காரணமாக பொது சுகாதார அவசரநிலையை, நேற்று முதல் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இயக்குனரகம் அறிவித்தது. இதுகுறித்து புதுச்சேரி அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நல சேவைகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”காரைக்கால் பகுதியில் சமீபகாலமாக கடுமையான வயிற்றுப்போக்கு நோய்தொற்று அதிக அளவில் பதிவாகி வருகின்றன, மேலும் பரிசோதிக்கப்பட்ட பெரும்பாலான தண்ணீர் மாதிரிகள் திருப்திகரமாக இல்லை. சில நோயாளிகளுக்கு காலரா தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும், தினசரி மருத்துவமனைக்கு வயிற்றுப்போக்குடன் வரும் நோயாளிகளின் என்ணிக்கை அதிகரித்து உள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு, சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இயக்குனரகம் வயிற்றுப்போக்கு நோய் காலரா நோயை” காரைக்கால் மாவட்டத்தில் பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, பொது மக்களும் விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், போதுமான அளவு கொதிக்கவைத்த தண்ணீரை (20 நிமிடங்கள் கொதிக்கவைத்து) குடிக்கவும், பொது இடங்கள் மற்றும் ஹோட்டல்களில் பாதுகாப்பான குடிநீரை உட்கொள்வதை உறுதி செய்யவும், கை கழுவுதல் மற்றும் தனிப்பட்ட சுகாதார நடவடிக்கைகளை உறுதிப்படுத்தவும், சரியாகக் கழுவி சமைத்த உணவை உட்கொள்ளவும், பொதுக் கழிப்பிட வசதிகளைப் பயன்படுத்தவும், திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தவிர்க்கவும், வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தால் அல்லது வாந்தி எடுத்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.