நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு இல்லை… நலமாக உள்ளார் – மருத்துவமனை அறிக்கை

0
126

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் விக்ரம் சினிமாவில் டப்பிங் கலைஞராக தனது பயணத்தை தொடங்கினார். கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் உடலை வருத்தி நடிக்கவும் முடியும், கமர்ஷியல் படங்களில் மாஸ் ஹீரோவாக வெற்றி கொடியையும் நாட்ட முடியும் என நிரூபித்திருக்கிறார் விக்ரம். தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகியப் படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் கோப்ரா படத்தில் விக்ரம் 20 கெட்டப்புகளில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ளார் விக்ரம்.

இந்நிலையில் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இன்று செய்திகள் வெளியாகின. இதனால் திரையுலகினரும் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையே விக்ரம் சிகிச்சை பெற்று வரும் சென்னை காவேரி மருத்துவமனை தரப்பில் தற்போது அவருடைய உடல்நலம் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “மார்பில் அசெளகரியம் ஏற்பட்டு நடிகர் விக்ரம் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எங்கள் சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருக்கு மாரடைப்பு இல்லை, அவரின் உடல்நிலை சீராக இருக்கிறது. விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.