நாட்டுத்துப்பாக்கியால் சுடப்பட்ட அபே… இனி ஜப்பானின் அணுகுமுறை கடுமையாகும்.. எச்சரிக்கும் நிபுணர்கள்

0
110

ஜப்பான் முன்னாள் பிரதமர் சின்ஷோ அபே மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் நாட்டுத்துப்பாக்கியைப் பயன்படுத்தியிருப்பது தெரியவந்திருக்கிறது. இந்த துப்பாக்கிச்சூடு ஜப்பான் நாட்டில் பாதுகாப்பு குறித்த அணுகுமுறையை முற்றிலுமாக மாற்றலாம் எனப் பாதுகாப்பு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜப்பானின் நரா என்ற நகரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்த ஷின்ஷோ அபேவின் மீது ஒரு மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் காயமான அபே ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

அபே மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 40 வயதுக்கு மேல் இருக்கலாம் எனவும் அவர் அதே நகரைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. அவர் துப்பாக்கிச்சூட்டிற்குப் பயன்படுத்தியது ஒரு நாட்டுத்துப்பாக்கி எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. செலபோன் டேப்களால் சுற்றப்பட்டு கையால் தயார் செய்யப்பட்ட அந்த நாட்டுத்துப்பாக்கியின் புகைப்படங்கள் ஜப்பான் ஊடகங்களால் பகிரப்பட்டுவருகின்றன.

ஜப்பானில் பொதுவாக ஒருவர் ஏர் கன் அல்லது ஷாட் கன் வகை துப்பாக்கிகளையே பணம் கொடுத்து வாங்க முடியும். ஆபத்தான ஹேண்ட் கன் போன்றவற்றை வாங்குவது அவ்வளவு சுலபமில்லை. அதற்குத் துப்பாக்கிச் சூடு, மனநலம் சார்ந்த தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும். மேலும் குடும்ப உறுப்பினர்களுடனான சண்டைகள், கடன் விவரங்கள், ஜப்பானின் அண்டர்வேர்ல்ட் சம்பந்தம் குறித்த கடுமையான விசாரணைக்குப் பிறகே துப்பாக்கி உரிமம் வழங்கப்படும்.

துப்பாக்கிக் கலாச்சாரம் மிக அதிகமாகவும், மோசமாகவும் உள்ள அமெரிக்காவுக்கு அருகிலிருந்தும், அந்நாட்டுடன் நீண்ட காலத் தொடர்பில் இருந்தும், ஜப்பானில் துப்பாக்கிச்சூடு சம்பந்தமான கொலைகள் மிக அரிதாகவே நடந்திருக்கின்றன. இவ்வளவு கடுமையான சட்டங்களுக்கு மத்தியிலும் ஜப்பானின் முன்னாள் பிரதமர் துப்பாக்கியால் சுடப்பட்டிருப்பது உலக அளவிலும், ஜப்பானிலும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த துப்பாக்கிச்சூடு துப்பாக்கி பயன்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்த ஜப்பானின் அணுகுமுறையை முற்றிலுமாக மாற்றலாம் என சர்வதேச பாதுகாப்பு தொழிலகத்தைச் சேர்ந்த நான்சி ஸ்னோ தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு 2007-ம் ஆண்டு இச்சோ இடோ என்ற நாகசாகி நகரின் மேயர் சுட்டுக்கொல்லப்பட்ட பின் ஜப்பானின் துப்பாக்கிச் சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.