இலங்கைக்கு தேவையான உதவி செய்ய இந்தியா தயார்

0
128

நெருக்கடியைச் சந்தித்து வரும் இலங்கைக்கு இந்தியா தேவையான உதவிகளை நிச்சயம் செய்யும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி தெரிவித்துள்ளார். கேரளா மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய அரசு இலங்கைக்கு எப்போதும் தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளது. அந்நாட்டிற்கு பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் அக்கறை கொண்டு இந்தியா செயல்படும். தற்போதைய சூழலில் அகதிகள் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை. அந்த நாடே தனது சிக்கல்களை தீர்த்துக்கொள்ள தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. எனவே, நிலைமை எவ்வாறு மாறுகிறது என்பதை கூர்ந்து கவனித்து பார்க்க வேண்டும் என்றார்.

கடும் பொருளாதார நெருக்கடியால் அசாதாரண சூழலை இலங்கை கண்டுவருகிறது. கோவிட் பரவலுக்குப் பின் அந்நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. உணவு, மின்சாரம், எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருள்களுக்கே அங்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருள்களின் விலை விண்ணை முட்டியதால் மக்கள் தெருக்களில் இறங்கி பெரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த மோசமான சூழலுக்கு ஆட்சி நடத்திவரும் ராஜபக்சே குடும்பம் தான் காரணம் என மக்கள் போராடி வருகின்றனர்.

அதிபர் கோத்தபயவுக்கு எதிராக மக்கள் போராட்டம் வலுவடைவதை அறிந்த இலங்கை அரசு, கடந்த வெள்ளிக்கிழமை இரவு 144 தடை உத்தரவு பிறப்பித்தது. இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்த நிலையில், ரயில், பேருந்து மற்றும் வாகன சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி, தலைநகர் கொழும்புவில் குவிந்த லட்சக்கணக்கான மக்கள் முதலில் அதிபர் மாளிகையை கைப்பற்றினர்.இதைத் தொடர்ந்து அதிபர் மாளிகையை விட்டு தப்பியோடிய கோத்தபயா தனது குடும்பத்தினருடன் தலைமறைவாக உள்ளார்.