Newsஇலங்கையில் பதில் ஜனாதிபதிச் சர்ச்கைக்கு எப்படி முடிவு வரப்போகின்றது?

இலங்கையில் பதில் ஜனாதிபதிச் சர்ச்கைக்கு எப்படி முடிவு வரப்போகின்றது?

-

இலங்கையில் பதில் ஜனாதிபதிச் சர்ச்கைக்கு எப்படி முடிவு வரப்போகின்றது எனப் பலரும் எதிர்பார்த்திருக்கும் நிலையில், இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் நேரடியாகச் சொல்லாதுவிட்டாலும், மறைந்திருக்கும் பொருள் விளகங்களின் பிரகாரம், கோட்டாபய ராஜபக்ச குறைந்தது மூன்று மாதங்கள் மருத்துவ விடுமுறை பெறக்கூடிய வாய்ப்பு உண்டு.

ஆகவே 13 ஆம் திகதி புதன்கிழமை பதவி விலகல் கடிதத்துக்குப் பதிலாகத் தனது மருத்துவ விடுமுறை பற்றிய கடிதத்தை கோட்டாபய ராஜபக்ச, சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தனவுக்குச் சமர்ப்பித்தாலும் வியப்பில்லை.

அவ்வாறு மருத்துவ விடுமுறை அறிவித்தால், பிரதமராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க யாப்பின் பிரகாரம் பதில் ஜனாதிபதியாகப் பதவியேற்க நேரிடும்.

பதில் ஜனாதிபதிக்குரிய சத்தியப்பிரமானத்தை உயர் நீதிமன்றப் பிரதம நீதியரசர் செய்துவைக்கலாம். அதற்கு நாடாளுமன்றம் கூட வேண்டிய அவசியம் இல்லை.

இலங்கை அரசியல் யாப்பில், பொருள்கோடல் என்பதை வாதத்திறன் உள்ள சட்டத்தரணி ஒருவரினால் தமக்குரியதாக மாற்றியமைக்க முடியும்.

எனவே கோட்டாபய ராஜபக்ச மருத்து விடுமுறை எடுத்தது தவறு என்று எவரேனும் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தால், ரணில் விக்கிரமசிங்கவுக்காக வாதாடும் சட்டத்தரணி பதில் ஜனாதிபதிக்குரிய நியமனத்தை நியாயப்படுத்தி வாதிடுவார்.

அதேநேரம் போராட்டக்குழு ஜனாதிபதி மாளிகைய, அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளதால், கோட்டாபயவும் ரணிலும் பதவி இழந்துள்ளதாக சஜித் தரப்புச் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் வியாக்கியணம் செய்யக்கூடும்.

ஆனால் போராட்டக்குழு அவ்வாறு கைப்பற்றி வைத்திருக்கின்றமை சட்டத்திற்கு முரணானது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கக்கூடிய வாய்ப்புகளே அதிகம்.

ஆகவே உயர் நீதிமன்றத் தீர்ப்பும் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவி வகிப்பது யாப்புக்கு அமைவானது என்றே அறிவிக்கப்படலாம்.

சட்டச் சிக்கலை எதிர்கொண்டு தமது போராட்டத்தை நியாயப்படுத்தக்கூடிய அளவுக்குப் போராட்டக் குழுவிடம் நிர்வாகத்திறன் இருப்பதாகத் தெரியவில்லை.
போராட்டம் வெற்றி என்பது உண்மையே. ஆனால் அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்ன என்பதைத் தீர்மானிக்க வேண்டிய போராட்டக்குழு, பிரதான அரசியல் கட்சிகளிடம் பொறுப்பைக் கையளித்துவிட்டு ஜனாதிபதி மாளிகையில் தங்கியிருக்கிறது.

வெற்றிபெற்ற அடுத்த கணமே. நாடாளுமன்றத்தைக் கூட்டு என்று போராட்டக்குழு அழுத்தியிருந்தால், அல்லது போராட்டக் குழு சார்பாக இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தால், நிச்சியம் சபாநாயகர் நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டிய கட்டாயச் சூழல் உருவாகியிருக்கும்.

ஆனால் அதற்கான சந்தர்ப்பம் தவறவிடப்பட்டுள்ளது. பன்னிரெண்டாம் திகதி செவ்வாய்க்கிழமை படுகொலை செய்யப்பட்ட ஜப்பான் பிரதமருக்காக தேசிய துக்க தினத்தை ரணில் அறிவித்திருப்பதால் நாளை நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியாது.

அப்படிக் கூடினாலும், பதில் ஜனாதிபதி, புதிய பிரதமர் யார் என்ற விவகாரங்களைப் பேசுவது துக்க தினத்தை அவமதிப்பதாக அமையும். அதனாலேயே மிக நுட்பமாகச் சிந்தித்து ரணில் விக்கிரமசிங்க தேசிய துக்க தினமாக அறிவித்திருக்கிறார் போலும்.

அடுத்த நாள் 13 ஆம் திகதி போயா விடுமுறை. ஆகவே அந்த நாளில் கோட்டாபய தனது மருத்துவ விடுமுறையை அறிவித்தால், போயா விடுமுறையில் நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியாது.

ஆனால் பதில் ஜனாதிபதியாக உயர் நீதிமன்ற நீதியரசர் முன்னிலையில் ரணில் விக்கிரமசிங்க பதவிப் பிரமாணம் செய்ய முடியும். உடனடியாகப் பதவி பிரமாணம் செய்தமைக்கான வலுவான காரணத்தை ரணில் முன்வைக்கக்கூடிய சட்ட ஏற்பாடுகளும் உண்டு.

ஆகவே இங்கே என்ன நடக்கிறது என்றால், ரணில் பதில் ஜனாதிபதியாக வருவதைத் தடுக்க சஜித், அனுரகுமார திஸாநாயக்கா ஆகியோர் கடும் முயற்சி எடுத்து வரும் நிலையில், அதற்கு எதிராக முடிந்தவரை தனது நுட்பமான இராஜதந்திர அணுகுமுறையை ரணில் கையாளுகின்றார்.

ரணிலுக்குச் சர்வதேச ஆதரவு உண்டு. ஆனால் வாக்கெடுப்பு நடத்திப் பதில் ஜனாதிபதியாக வருமளவுக்கு ரணிலுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இல்லை.

இருந்தாலும் மேற்படி கூறப்பட்ட வழிமுறைகள் மூலம் பதில் ஜனாதிபதியாக ரணில் வருவாரானால், பல சிங்கள அரசியல்வாதிகள் ஒதுங்க நேரிடும்.
ராஜபக்ச குடும்பமும் காப்பாற்றப்படும்.

இதனைத் தமிழ்த்தேசிய நோக்கில் அவதானித்தால்–

ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியானால், சா்வதேச அரங்கில் இருந்து ஈழத்தமிழர் விவகாரம் முற்றாகவே நீக்கம் செய்யப்படும்.
ரணில் விக்கிரமசிங்கவை வெட்டி ஓடக்கூடிய ஆற்றல் உள்ள தமிழ்ப் பிரதிநிதிகள் இருக்கின்றனர். ஆனால் தேர்தல் அரசியல் போதுமென்ற மன நிலையிலேயே அவர்கள் செயற்படுகின்றனர்.

இந்தப் பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி பிரதமராகப் பதவி வகித்த ஒன்றரை மாதத்தில் ஜெனீவா மனித உரிமைச் சபையில் இருந்து ஈழத்தமிழர் விவகாரத்தை ரணில் முற்றாக மாற்றிவிட்டார் என்ற தகவல்கூட தமிழ்த்தேசியத் தலைவர்கள் பலருக்குத் தெரியாது.

—வடக்குக் கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவு மக்கள் என்று நோக்கினால்—

தற்போதைய பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாட்டுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடிய ஆற்றல் உள்ளவர் ரணில் மாத்திரமே.
இங்கே பிரச்சினை என்னவென்றால், தமிழ்த்தேசிய ஆய்வாளர்கள் சிலர், ரணில் விக்கிரமசிங்க தமிழ் இன விரோதி என்று புலம்புகின்றனர். ஆனால் ரணில் சிங்கள பௌத்த மக்களுக்குரிய கடமையை, சிங்கள மக்களின் பல குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியிலும் புத்தி வகுத்துச் செய்கிறார்.

ஆகவே கேள்வி என்னவென்றால், தமிழ்த்தேசியக் கட்சிகளில் உள்ள சட்டப் புலமையாளர்கள் சிலருக்கு ரணில் விக்கிரமசிங்க போன்று சர்வதேசத்தைக் கையாளக்கூடிய ஆற்றல் ஏன் இல்லாமல் போனது?

வேறு சில சட்டப் புலமையாளா்கள் 2015 இல் ரணில் அமைத்த அரசாங்கத்தோடு படுத்திருந்து தமிழ்த் தேசியத்திற்காக உழைத்தாகக் காண்பித்தார்கள்.
ரணில் பதில் ஜனாதிபதியானால், 2015 இல் அமைத்த அரசாங்கத்தைப் போலல்லாது, தனித்துச் செயற்பட்டு முதல் வேலைத்திட்டமாக ஈழத்தமிழர் விவகாரத்தை மிக நுட்பமாகக் கையாண்டு, சா்வதேச சமூகத்தை முற்று முழுதாகத் திசை திருப்புவார்.

பொருளாதார நெருக்கடிக்கான மூல காரணம் முப்பது ஆண்டுகால போருமல்ல, 2009 இன் பின்னரான வடக்குக் கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ மயமாக்கலுமல்ல என்பதை நிறுவுவார்.

சில தமிழ்ப் பிரதிநிதிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகள் சிலவும் ரணிலோடு ஒத்தூதி இலங்கை ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களை முடக்கி விடுவர் என்பது கண்கூடு.

Nixon A

Latest news

ஆஸ்திரேலியாவில் மின்சாரக் கட்டணம் அதிகம் செலுத்தும் மாநிலங்கள் எவை தெரியுமா?

ஆஸ்திரேலியாவின் மின்சாரக் கட்டணம் அதிகம் செலவாகும் மாநிலங்கள் எவை என பெயரிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியர்கள் தங்கள் மின்சாரக் கட்டணங்களுடன் மிகவும் சிரமப்படுகிறார்கள் மற்றும் ஆஸ்திரேலிய எரிசக்தி கட்டுப்பாட்டாளர் அதன்...

ஆஸ்திரேலியாவில் திருமண செலவுகள் தொடர்பில் வெளியான அறிக்கை

ஆஸ்திரேலியாவில் திருமண விழாவை நடத்த விரும்பும் தம்பதிகளின் சராசரி செலவு 35,000 டாலர்களை தாண்டியுள்ளது தெரியவந்துள்ளது. அதன்படி அவுஸ்திரேலியாவில் திருமணம் செய்யவிருக்கும் பல தம்பதிகள் தங்களது திருமணங்கள்...

Protection VISA தொடர்பில் பரப்பப்படும் பல தவறான தகவல்கள்!

பாதுகாப்பு விசா (துணைப்பிரிவு 866) தொடர்பில் பல தவறான தகவல்கள் பரப்பப்பட்டமையால், புலம்பெயர்ந்தோர் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக உள்நாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி...

விக்டோரியாவில் இறைச்சிக்கு தட்டுப்பாடு நிலவும் என எச்சரிக்கை

விக்டோரியா மாகாணத்தில் சிறு விவசாயிகளால் வழங்கப்படும் இறைச்சியின் அளவு எதிர்காலத்தில் சந்தையில் இருந்து காணாமல் போக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம், சென்ட்ரல் விக்டோரியாவில் Kyneton-இற்கு அருகில்...

விக்டோரியாவில் இறைச்சிக்கு தட்டுப்பாடு நிலவும் என எச்சரிக்கை

விக்டோரியா மாகாணத்தில் சிறு விவசாயிகளால் வழங்கப்படும் இறைச்சியின் அளவு எதிர்காலத்தில் சந்தையில் இருந்து காணாமல் போக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம், சென்ட்ரல் விக்டோரியாவில் Kyneton-இற்கு அருகில்...

வரும் நாட்களில் மூடப்படும் பல ஆஸ்திரேலிய சேவைகள் மையங்கள்

"Services Australia" நிறுவனம் அடுத்த சில நாட்களில் தங்களது பல சேவை மையங்கள் மற்றும் கால் சென்டர்கள் மூடப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, கிறிஸ்துமஸ், குத்துச்சண்டை...