இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்து உள்ளது. இதை அடக்க இந்தியா தனது படைகளை அனுப்பும் என இலங்கை ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. மேலும் பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமியும், இலங்கைக்கு இந்தியா படைகளை அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘கோத்தபய மற்றும் மகிந்த ராஜபக்சே இருவரும் ஒரு சுதந்திரமான தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்தவர்கள். அவர்களின் சட்டப்பூர்வ வெற்றியை ஒரு கும்பல் மாற்றுவதை எப்படி அனுமதிக்க முடியும்? பின்னர் இந்தியாவின் எந்த ஜனநாயக அண்டை நாடும் பாதுகாப்பாக இருக்காது.
எனவே இந்திய ராணுவத்தின் உதவியை ராஜபக்சே நாடினால், இந்தியா நிச்சயம் வழங்க வேண்டும்’ என கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து இலங்கைக்கு இந்தியா படைகளை அனுப்பும் தகவல்களை கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் நிராகரித்து உள்ளது. இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில், ‘இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவது குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ள யூகத்தின் அடிப்படையிலான செய்திகளை தூதரகம் திட்டவட்டமாக மறுக்கிறது. இந்த அறிக்கைகள் மற்றும் இதுபோன்ற கருத்துகள் இந்திய அரசின் நிலைப்பாட்டுக்கு மாறானது’ என்று குறிப்பிட்டு உள்ளது.