இங்கிலாந்து பிரதமர் தேர்தல்…முதல் சுற்றில் அதிக வாக்குகள் பெற்ற இந்திய வம்சாவளி ரிஷி சுனாக்

0
131

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அமைச்சரவையில் ஊழல் புகார் எழுந்தது. முன்னாள் துணை தலைமை கொறடா கிறிஸ்டோபர் பின்சர் தொடர்புடைய சமீபத்திய ஊழலால் அக்கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, இங்கிலாந்து சுகாதார மந்திரி சாஜித் ஜாவித், இந்திய வம்சாவளி எம்.பி.யான ரிஷி சுனாக் உள்ளிட்ட அரசின் உயர் பதவியில் இருந்த 30 பேர் பதவி விலகினர். மொத்தம் 58 மந்திரிகள் அரசில் இருந்து வெளியேறினர். இதனால், பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். தனது நெருங்கிய சகாவான கஜானா தலைவர் நதீம் ஜகாவி, நாட்டின் நலனை முன்னிட்டு பதவி விலகும்படி கூறியதன் அடிப்படையில் ஜான்சன், கடந்த 7ந்தேதி பதவி விலகினார். எனினும், புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை அவர் இந்த பதவியில் தொடருவார். கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் ஜான்சன் இருந்த நிலையில், கட்சி தலைவர் பதவியில் இருந்தும் அவர் விலகினார். எனவே கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகளும் தொடங்க உள்ளன.

போரிஸ் ஜான்சன் பதவி விலகலை தொடர்ந்து புதிய பிரதமருக்கான பதவிக்கு பல்வேறு நபர்கள் போட்டியில் இறங்கியுள்ளனர். அவர்களில் ஜான்சன் மந்திரி சபையில் நிதி மந்திரியாக பதவி வகித்த, இந்திய வம்சாவளி எம்.பி.யான ரிஷி சுனாக் கடந்த வெள்ளி கிழமை புதிய பிரதமர் போட்டிக்கான தனது அறிவிப்பினை வெளியிட்டார். இதேபோன்று, அமைச்சரவையில் இருந்து பதவி விலகிய பாகிஸ்தான் வம்சாவளி சுகாதார மந்திரி சஜித் ஜாவித், போக்குவரத்து மந்திரி கிராண்ட் ஷேப்ஸ், முன்னாள் வெளியுறவு மந்திரி ஜெரேமி ஹண்ட் ஆகியோரும் போட்டியில் உள்ளனர். மேலும் அட்டார்னி ஜெனரல் சுவெல்லா பிரேவர்மென், ஈராக் வம்சாவளி நதீம் ஜகாவி, நைஜீரிய வம்சாவளி கெமி பெடனாக், டாம் டுகெந்தாட் ஆகியோரும் வேட்பாளர் ஆனார்கள். இந்த போட்டியில் வர்த்தக மந்திரி பென்னி மோர்டான்டும் இணைந்து உள்ளார். இந்த சூழலில், இங்கிலாந்து புதிய பிரதமர் பதவிக்கான போட்டியில் அந்நாட்டு வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் இறங்கினார். கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும் அவர் விருப்பம் தெரிவித்து உள்ளார்.

இதற்காக, இந்தோனேசியாவில் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற அவர், உடனடியாக அதனை முடித்து கொண்டு லண்டனுக்கு திரும்பினார். எம்.பி. ரகுமான் சிஸ்டி போட்டியில் உள்ள சூழலில், லிஸ்சின் அறிவிப்பு ஆகியவற்றால், இங்கிலாந்து நாட்டின் அடுத்த பிரதமருக்கான போட்டி வேட்பாளர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. 58 வயது நிறைந்த ஜான்சன் 3 ஆண்டுகளாக அதிகாரத்தில் நீடித்து வந்த நிலையில், கட்சிக்கு நன்கொடை அளிப்பவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளார் என குற்றச்சாட்டுகள் எழுந்தன. அடாவடித்தனத்தில் ஈடுபட்ட மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான தனது ஆதரவாளர்களை பாதுகாத்து வந்துள்ளார். நாடாளுமன்றத்தினை தவறாக வழிநடத்தியதுடன், பொதுமக்களுக்கு நேர்மையற்ற முறையில் நடந்து கொண்டார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊரடங்கு விதிகளை மீறி நடந்து கொண்டார் ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது எழுப்பப்பட்டன. இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து போக்குவரத்து மந்திரி கிராண்ட் ஷேப்ஸ், முன்னாள் சுகாதார மந்திரி சஜித் ஜாவித் மற்றும் வெளியுறவு மந்திரி ரகுமான் சிஸ்டி ஆகிய 3 பேர் வாபஸ் பெற்று விட்டனர்.

இதனால், இந்த தேர்தலில் இறுதியாக 8 பேர் போட்டியில் இடம் பெற்றனர். இவர்கள் அனைவரும் கன்சர்வேடிவ் கட்சியின் 20 உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் முதல் சுற்று வாக்கெடுப்பில் போட்டியிடும் தகுதி பெற்றனர். தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களின் முன்பதிவு நிறைவடைந்து விட்டது. முதல் சுற்று தேர்தலில் 30 எம்.பி.க்களின் ஆதரவை பெற தவறும் எந்தவொரு வேட்பாளரும் வெளியேற்றப்படுவார். புதிய கன்சர்வேடிக் தலைவர் 2 நிலையிலான தேர்தல் முறையில் தேர்வு செய்யப்படுவார். இதற்காக 358 உறுப்பினர்கள், அடுத்தடுத்து நடத்தப்படும் வெளியேற்றுதல் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வேட்பாளர்களின் எண்ணிக்கையை குறைத்து கொண்டே வருவார்கள். இறுதியில் 2 வேட்பாளர்கள் என்ற நிலைக்கு கொண்டு வரப்படும். இந்த தேர்தலில் போட்டியிடும் பலரும், கார்ப்பரேசன் வரி, வருமான வரி உள்ளிட்ட வரிகளை குறைப்போம் என உறுதி கொடுத்து உள்ளனர். இங்கிலாந்தில் விரி விதிப்பு மக்களுக்கு நெருக்கடியாக உள்ள சூழலில் அதனை வேட்பாளர்கள் கையில் எடுத்துள்ளனர். இந்த சூழலில், கன்சர்வேடிவ் கட்சி தலைவர் மற்றும் இங்கிலாந்து பிரதமருக்கான முதல் சுற்று வாக்கெடுப்பில் முன்னாள் இங்கிலாந்து நிதி மந்திரி ரிஷி சுனாக் அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.

இந்த தேர்தலில் சுனாக் 88 வாக்குகளும், பென்னி மோர்டான்ட் 67 வாக்குகளும் மற்றும் டிரஸ் லிஸ் 50 வாக்குகளும் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். நிதி மந்திரி நதீம் ஜகாவி மற்றும் முன்னாள் மந்திரி ஜெரேமி ஹன்ட் ஆகிய 2 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். இந்த போட்டியில் மற்றொரு இந்திய வம்சாவளியான அட்டர்னி ஜெனரல் சுவெல்லா பிரேவர்மென் எம்.பி.யும் உள்ளார்.