Newsதமிழ் சிவில் சமூக அமைப்புகளின் கூட்டறிக்கை! இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார...

தமிழ் சிவில் சமூக அமைப்புகளின் கூட்டறிக்கை! இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி

-

ஜூலை 13, 2022 அன்று கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையை விட்டு வெளியேறினார். இலங்கைத் தீவின் பெரும்பான்மைச் சிங்கள இனத்தையும், பன்னாட்டுச் சமூகத்தையும் சார்ந்த பலர் இத்தருணத்தை, பல மாதகாலப் போராட்டத்தின் உச்சக்கட்டமாகவும், ஒரு புரட்சிகர நிகழ்வாக அமையக்கூடியதொன்றாகவும் பிரகடனம் செய்துள்ளனர். நாட்டின் பெரும்பாலான மக்களை உணவு, எரிபொருள், மருந்துகள் இல்லாமல் தவிக்கவிட்டிருக்கும் முன்னெப்போதும் இல்லாதளவு பாரதூரமான இப்பொருளாதார நெருக்கடியின்போது சனாதிபதியாகவிருந்தவரின் வெளியேற்றம் உண்மையில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தருணமாகவே உணரப்படுகிறது. அதிகரித்துக்கொண்டே செல்லும் அரச வன்முறை மற்றும் வன்முறை அச்சுறுத்தல்களுக்கு மத்தியிற் களநிலவரம் தொடர்ந்து மாற்றமடைந்து கொண்டிருக்கிற போதிலும், கோரிக்கைகள் பெரும்பாலும் அரசின் உயர் மட்டத்தில் உள்ளவர்களை மாற்றுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது. எவ்வாறாயினும், பல தசாப்தங்களாக இன மோதலினால் பாதிக்கப்பட்டுள்ள இத்தீவில் உண்மையான மாற்றம் ஒன்று நிகழ்வதற்கு இத்தருணம் வழிவகுக்கவேண்டுமெனில், மேலும் பல விடயங்கள் அக்கோரிக்கைகளில் உள்ளடக்கப்பட வேண்டும்.

தமிழ்த் தேசத்தைப் பொறுத்தவரை, ராஜபக்ஷக்கள் பொருளாதாரத்தை நிர்வகிப்பதிற் திறமையற்றவர்கள், ஊழல் செய்பவர்கள் என்பதோடு, கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை இராணுவத்தினாற் போரின் இறுதியில் இழைக்கப்பட்ட இனப்படுகொலை உள்ளிட்ட பாரிய அட்டூழியக் குற்றச்செயல்களை மேற்பார்வை செய்த போர்க்குற்றவாளி என்பதும் முக்கியமானதொன்றாகவிருக்கிறது. இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து இத்தீவில் இடம்பெறும் தொடர்ச்சியான வன்முறைகளுக்கு அடிப்படையாகவிருக்கும் சிங்கள-பௌத்தத் தேசியவாதமே, பெரும்பான்மைச் சமூகத்தினரால் ஒரு போர்க்குற்றவாளியாகவல்லாது, ஒரு போர்வீரனாகப் பார்க்கப்பட்ட ராஜபக்ஷவை 2019 இற் பெரும்பான்மைச் சிங்கள வாக்குகளின் மூலம் அதிகாரத்திலமர்த்தியது. தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களை ஒடுக்கும் கொள்கைகளை ராஜபக்ஷ தொடர்ந்தும் முன்னெடுத்தமை பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்களாற் புறக்கணிக்கப்பட்டது அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர் சிங்கள- பௌத்தத் தேசத்தின் பாதுகாவலராகப் போற்றப்பட்டார். பாதுகாப்புப் படையினரால் இழைக்கப்பட்ட குற்றச்செயல்களை வெள்ளையடிப்புச் செய்வது, கடந்த சில மாதங்களாகத் தெற்கில் இடம்பெற்றுவரும் போராட்டங்களினதும், அரசியல் உரையாடல்களினதும் ஒரு எச்சரிக்கையடைய வேண்டிய அம்சமாக விளங்குகிறது. மேலும், இப்போராட்டங்களும், உரையாடல்களும், பாதுகாப்புப் படையினரால் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளை ஒப்புக்கொள்ளத் தவறியுள்ளன. சனாதிபதி செயலகம் ஆர்ப்பாட்டக்காரர்களாற் கைப்பற்றப்பட்ட போதிலும், 2009 இல் இலங்கை இராணுவத் தளபதியாகவிருந்த சரத் பொன்சேகா உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த போர்க் குற்றவாளிகளென அறியப்படுபவர்களை ஆர்ப்பாட்டங்களின்போது மேடையேற்றியமை, சிங்கள-பௌத்த மேலாதிக்கமும், இராணுவமயமாக்கலும் இத்தீவில் விடாப்பிடியாக முன்னிறுத்தப்படுவதை அம்பலமாக்கியுள்ளது. இவ்வரலாற்றுத் தருணமானது, சிங்கள-பௌத்தத் தேசியவாதத்தை எதிர்கொள்வதற்கும், தமிழர்களின் நியாயமான நீண்டகாலக் குறைகளை நிவர்த்திசெய்வதற்கும் பயன்படுத்தப்பட வேண்டும்.

இலங்கையின் இனத்துவ அரசியற் கட்டமைப்புகளையும், அட்டூழியங்களின் வரலாற்றையும், அதன் மூலம் இறுதியிற் தற்போதைய நெருக்கடிக்கு வழிவகுத்த மூல காரணங்களையும் எதிர்கொள்வதிற் போராட்டக்காரர்களோ அல்லது அரசியல்வாதிகளோ அர்ப்பணிப்புடன் இருப்பதற்கான எந்த அறிகுறிகளும் தற்போது தென்படவில்லை என்பது குறித்து கீழே கையொப்பமிட்டுள்ள அமைப்புகளாகிய நாம் கவலை கொள்கிறோம். இது, மேலும் உறுதியற்ற தன்மைக்கும், வன்முறைக்கும், பொருளாதார வீழ்ச்சிக்குமே வழிவகுக்கும். எனவே, அதிகாரத்திலமரும் எந்தவொரு புதிய அரசாங்கமும் பின்வரும் ஐந்து நடவடிக்கைகளையும் உறுதிசெய்ய வேண்டுமென அனைத்துப் பங்குதாரர்களையும் வலியுறுத்தும்படி நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்:

  1. இத்தீவின் மதச்சார்பற்ற தன்மைக்கும், பல்தேசியத் தன்மைக்கும், அதில் வாழும் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கும் மதிப்பளித்து, அரசியல், பொருளாதாரம், நிலம் மற்றும் பாதுகாப்பு அதிகாரங்களை அர்த்தமுள்ள வகையிற் பகிர்ந்தளிக்கும் வகையில் அரசை மறுசீரமைக்கும் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும்;
  2. உரோம் சாசனத்தை அங்கீகரித்து, அதைக் கடந்த காலத்திலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் நிறைவேற்றி, போரின் போதும், அதற்குப் பின்னரும் இழைக்கப்பட்ட அட்டூழியக் குற்றங்கள் மீதான சர்வதேச வழக்குகளை ஆதரிக்க வேண்டும்;
  3. வரவுசெலவுத் திட்டத்தில் பாதுகாப்புக்கு அதிகளவில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியைக் குறைத்து, பொருளாதார வளர்ச்சிக்கான செலவினத்திற்காக மறுஒதுக்கீடு செய்வதன் மூலம் பொருளாதாரத்தை மறுசீரமைப்பதற்கு, வடக்கிலும், கிழக்கிலும் இராணுவமயமாக்கலை இல்லாதொழிக்க வேண்டும்;
  4. வடக்கிலும், கிழக்கிலும் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அரசியற் கைதிகளின் குடும்பத்தினரால் நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதோடு, இதன் ஆரம்பப் புள்ளியாகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும்; மற்றும்
  5. வடக்கிலும், கிழக்கிலும், அரச அதிகார அமைப்புகளாலும், பாதுகாப்புப் படைகளாலும் நிலம் கையகப்படுத்தப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இலங்கையின் வரலாற்றை நோக்கினால், இத்தீவில் நிலவும் மோதல்களின் மூல காரணங்களை நிவர்த்தி செய்வதற்கும், இந்த நாடு பயணிக்கும் பாதையை மாற்றுவதற்கும், இங்கு அதிகாரத்திலிருந்த அரசாங்கங்களுக்குப் பல சந்தர்ப்பங்கள் வாய்த்திருந்ததைக் காண முடியும். ஆனால், ஒவ்வொரு முறையும் அச்சந்தர்ப்பங்களை அவர்கள் சரியாகப் பயன்படுத்தவில்லை. கீழே கையொப்பமிட்டுள்ள அமைப்புகளாகிய நாம், இம்முறை அம்மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், நல்லெண்ணத்துடன் இவ்வறிக்கையை உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்.

கையொப்பமிட்டவர்கள்:

அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம்

தமிழ் சிவில் சமூக அமையம்

PEARL

தமிழர் மரபுரிமை பேரவை

புழுதி – சமூக மாற்றத்திற்கான அமைப்பு

உண்மைக்கும் மாற்றத்திற்குமான அமைப்பு

நீதிக்கும் அமைதிக்குமான வடக்கு-கிழக்கு குருக்கள் துறவிகள்

Latest news

ஆஸ்திரேலிய உட்கட்டமைப்புக்களை சீர்குலைக்க முயற்சி

நாட்டின் முக்கிய உட்கட்டமைப்பு வசதிகளை சீர்குலைப்பதற்கான முயற்சிகள் இணைய ஊடுருவல்காரர்கள் ஊடாக இடம்பெற்று வருவதாக ஆஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் தலைவர் மைக் பர்கெஸ் தெரிவித்துள்ளார். அரசாங்க...

திரும்பப் பெறப்பட்ட மற்றுமொரு Sunscreen தயாரிப்பு

ஆஸ்திரேலியாவில் Sunscreen தயாரிப்புகளின் செயல்திறன் குறித்த கவலைகள் காரணமாக அவற்றை திரும்பப் பெறும் நிறுவனங்களின் வரிசையில் Cult beauty பிராண்டான Bondi Sands சமீபத்தியதாக மாறியுள்ளது. சிகிச்சை...

Shelby Cobra உட்பட 12 திருடப்பட்ட வாகனங்களை மீட்டுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை நடத்திய சோதனையில் 12 திருடப்பட்ட கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. $120,000 மதிப்புள்ள Shelby Cobra மாற்றத்தக்க காரும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது Pentland Hills-இல்...

Berries பழங்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள புதிய சுகாதார எச்சரிக்கை

Berries பழங்களில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லியால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய உடல்நல ஆபத்து குறித்து புதிய சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிக ஊட்டச்சத்து மதிப்புள்ள Raspberry, Blueberry மற்றும் Blackberries...

கட்டுமானத் துறையில் நிலவும் பாரிய தொழிலாளர்கள் பற்றாக்குறை

ஆஸ்திரேலியாவின் கட்டுமானத் துறையில் மிகப்பெரிய அளவில் தொழிலாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா முழுவதும் பல பில்லியன் டாலர் உள்கட்டமைப்பு திட்டங்களில் கட்டுமானத்...

விக்டோரிய அரசாங்கம் அறிமுகப்படுத்தும் புதிய குற்றவியல் சட்டங்கள்

விக்டோரியா அரசாங்கம், கடை மற்றும் விருந்தோம்பல் பணியாளர்களுக்கு எதிரான வன்முறை நடத்தையை இலக்காகக் கொண்டு புதிய குற்றவியல் சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, பிரதமர் ஜெசிந்தா...