
அமெரிக்க பணவீக்க புள்ளி விவரங்கள் நேற்று வெளியான நிலையில், ஜூன் 2022ல் அமெரிக்காவின் சில்லறை பணவீக்கம் 9.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும் கொரோனா தொற்று அதிகரிப்பு போன்ற காரணங்களால் உலக அளவில் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. பொருட்களின் தேவை அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் உணவுப்பொருட்கள் தொடங்கி பல பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பணவீக்கம் கடுமையாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் சில்லறை பணவீக்கம் 9.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மே மாதம் அமெரிக்காவின் நுகர்வோர் பணவீக்கம் 1 சதவீதம் உயர்ந்த நிலையில், ஜூன் மாதம் 1.3 சதவீதம் அதிகரித்து 9.1 சதவீதம் என்ற மோசமான நிலையை அமெரிக்கா அடைந்துள்ளதாக அமெரிக்காவின் தொழிலாளர் புள்ளியியல் அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் பணவீக்க விகிதம் வேகமாக அதிகரித்து வருவதால் அங்கு பொருளாதார மந்தநிலை மீண்டும் ஏற்படுவதற்கான சூழல் உருவாகி வருவதாக பிரபல பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் வங்கி கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொடர்ந்து வட்டி விகிதத்தை பெடரல் வங்கி உயர்த்தி வருகிறது.
இதன் தாக்கம் தங்கத்தின் விலையில் எதிரொலிக்கிறது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் அதிகமான வட்டி தரும் அமெரிக்க வங்கிகளுக்கு தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதனால் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. 1981ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குப் பிறகு இப்போது தான் பணவீக்கம் 9.1 சதவீத அளவீட்டை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.