கோத்தபய ராஜபக்சே எங்களிடம் தஞ்சம் கேட்கவில்லை… சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம்

0
201

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியான சூழலால் மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த சூழலில், ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த 9ந்தேதி இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின்னர், கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். எனினும், போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பி சென்று விட்டார். அவர் எங்கிருக்கிறார் என தெரியாத நிலையில், கோத்தபயா தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு நேற்று அதிகாலை ராணுவ விமானத்தில் தப்பி சென்று விட்டார் என தகவல் வெளியானது.

இந்நிலையில், மாலத்தீவுக்கு குடும்பத்துடன் தப்பி சென்ற கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவில் இருந்தபடியே சிங்கப்பூருக்கு செல்ல இருக்கிறார் என்று அந்நாட்டில் இருந்து வெளிவரும் டெய்லி மிர்ரர் தகவல் வெளியிட்டது. இதன்படி, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது மனைவியுடன் சவுதி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எஸ்.வி.788 ரக விமானத்தில் இன்று காலை 11.30 மணியளவில் புறப்பட்டு உள்ளார். அவர்கள் இன்று இரவு 7 மணியளவில் சிங்கப்பூர் சென்றடைய உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் இருவரும் சிங்கப்பூரிலேயே தங்குகின்றனர் என்றும் ஜெட்டாவுக்கு செல்லவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனிப்பட்ட பயணம் என்ற முறையில் சிங்கப்பூருக்கு வந்துள்ளார். அவர் எங்களிடம் தஞ்சம் எதுவும் கேட்கவில்லை. அவருக்கு தஞ்சம் அளிக்க ஒப்புதலும் வழங்கப்படவில்லை என தெரிவித்து உள்ளது.

Previous articleஅமெரிக்காவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்த பணவீக்கம்
Next articleநடிகை ரியா சக்ரவர்த்தி மீது போதை பொருள் தடுப்பு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்