வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் கவனத்திற்கு…

0
343

ஸ்மார்ட் ஃபோன் மற்றும் இண்டர்நெட் கனெக்‌ஷன் உள்ள அனைவரும் தவறாமல் பயன்படுத்தி வரும் ஒரு ஆப் என்றால் அது வாட்ஸ்அப் தான். நம் குடும்ப உறவுகள், நண்பர்கள், அலுவலகத்தில் பணியாற்றும் சக ஊழியர்களோடு உரையாடவும், ஃபோட்டோ, வீடியோ உள்ளிட்ட மீடியாக்களை அனுப்பி வைக்கவும், அதேபோன்று டாக்குமெண்டுகளை பகிர்ந்து கொள்ளவும் வாட்ஸ்அப் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. இது தவிர்த்து, தற்போது யூசர்களின் நலன் கருதி பணப்பரிமாற்ற வசதியும் வாட்ஸ்அப்-பில் இடம்பிடித்துள்ளது.

வாட்ஸ்அப் APP-யில் வாரந்தோறும் அப்டேட்கள் அறிமுகப்படுத்தப்படுவதை போலவே, ஆபத்துக்கள் குறித்த எச்சரிக்கையும் வெளியாகி வருகின்றன. தற்போது வாட்ஸ்அப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான வில் கேத்கார்ட் வாட்ஸ்அப் செயலியை அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் பிளேஸ்டோரில் மட்டுமே டவுன்லோடு செய்யுமாறு யூஸர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து வாட்ஸ்அப் யூஸர்களுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ள அவர், மெசேஜிங் ஆப்-யின் போலி பதிப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார் வில் கேத்கார்ட். பெரும் சிக்கலில் சிக்கக்கூடும் என்பதால், வாட்ஸ்அப் யூஸர்கள் யாரும் அதனைப் போன்ற போலியான பதிப்பை பயன்படுத்த வேண்டாம் என்று ட்விட்டரில் கேட்டு கொண்டுள்ளார்.

வாட்ஸ் அப்-க்கு நிகரான பல சேவைகளை அளிப்பதாக போலி செயலிகள் இணையத்தில் உலவுவதை அந்நிறுவனத்தின் பாதுகாப்பு ஆய்வு குழு கண்டறிந்துள்ளது. குறிப்பாக ‘ஹே மோட்ஸ்’ (“HeyMods” ) என்ற டெவலப்பர் குழுவால் வெளியிடப்பட்டு இருக்கும் ‘ஹே வாட்ஸ் அப்’ ( “Hey WhatsApp” ) ஆப்-பை பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆப் வாட்ஸ்அப் யூஸர்களுக்கு சில புதிய அம்சங்களை வழங்குவதாக உறுதியளிக்கிறது, ஆனால் அதனை உண்மை என நம்பி டவுன்லோடு செய்யும் யூஸர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப்பின் மாற்றியமைக்கப்பட்ட அல்லது போலியான பதிப்புகள் வாட்ஸ்அப்பைப் போலவே அம்சங்களை வழங்க முடியும் என்றாலும், ஒரிஜினல் வாட்ஸ்அப்பில் பயன்படுத்தப்படும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வசதி இருக்காது. இதுவே உங்கள் சாட்டிங் மற்றும் தனிப்பட்ட தரவைப் பாதுகாக்க உதவுகிறது. இந்த பாதுகாப்பு அம்சம் காரணமாகவே வாட்ஸ்அப் முதற்கொண்டு யாரும் உங்களது விவரங்களை அணுகாத வண்ணம் பாதுகாக்க முடிகிறது.

வாட்ஸ்அப்பின் போலி பதிப்புக்கள் ப்ளே ஸ்டாரில் இல்லை என்றாலும், இதனை யூசர்கள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் அதாவது நேரடியாக அந்த இணையதளங்களுக்கே சென்று தரவிறக்கம் செய்யும் போது கவனத்துடன் தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்பின் அதிகாரப்பூர்வ பதிப்பை நிறுவனத்தின் இணையதளம் அல்லது கூகுள் பிளே ஸ்டோர் போன்ற நம்பகமான ஆப் ஸ்டோர்கள் மூலம் டவுன்லோடு செய்யுமாறு யூஸர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து வாட்ஸ்அப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான வில் கேத்கார்ட் தனது ட்விட்டர் பதிவில், “இதுபோன்ற போலி ஆப்களை கண்டறிந்து தடுப்பதற்கான எங்கள் முயற்சிகளை தொடர்ந்து வருகிறோம். எதிர்காலத்தில் இதுபோன்ற தீங்குகளை தவிர்க்க ஹேமோட்ஸ்’ நிறுவனத்திற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.

Previous articleகோத்தபய ராஜபக்சே மாலத்தீவு தப்பிச் செல்ல இந்தியா உதவியதா?
Next articleMonthly In-house Concert series