பிரதமர் நரேந்திர மோடி பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக கடந்த 11,12 ஆகிய தேதிகளில் பயணம் சென்றிருந்திருந்தார். இந்த பயணத்தின் போது பிரதமரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாகக் கூறி முகமது ஜலாலுதீன், அதார் பர்வேஸ், அர்மான் மாலிக் ஆகிய மூவரை காவல்துறை கைது செய்துள்ளது. இதில் அதார் பர்வேஸ், ஜார்கண்ட் மாநிலத்தில் காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
காவல்துறை தனது புலனாய்வு தகவலின் படி, நடத்திய சோதனையில் முகமது ஜலாலுதீன் மற்றும் அதார் பர்வேஸ் ஆகியோர் சில நாள்களுக்கு முன்பாகவே கைது செய்யப்பட்ட நிலையில், இவர்கள் இருவரிடம் நடத்திய விசாரணையில் அர்மான் மாலிக் நேற்று கைது செய்யப்பட்டார். இவர்கள் அனைவரும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா, சிமி போன்ற அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் இதற்கான ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் காவல்துறை நடத்திய சோதனையின் போது 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை இஸ்லாமிய ஆட்சி நாடாக மாற்ற திட்டம் என்ற தலைப்பில் பரப்புரை கொண்ட ஆவணங்கள் இவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள புல்வாரி ஷரீப் என்ற இடத்தில் இந்த நபர்கள் ஒன்று கூடி சதித் திட்டங்களை தீட்டி வந்துள்ளனர்.
இவர்களுடன் கேரளா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் வந்து சந்தித்து பயிற்சி பெற்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் இதுவரை மொத்தம் 27 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் அனைத்து விசாரணை அமைப்புகளும் ஒருங்கிணைந்து தகவல்களை திரட்டி வருவதாகக் கூறிய காவல்துறை, இதன் பின்னணியில் உள்ள அனைத்து குற்றவாளிகளும் விரைவில் பிடிபடுவார்கள் என உறுதி அளித்துள்ளது.