லண்டனில் பிரபல நடிகையுடன் டேட்டிங்.. லலித் மோடியின் வைரல் ட்வீட்

0
277

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரை உருவாக்கிய பிரபல தொழிலதிபர் லலித் மோடி நடிகை சுஷ்மிதா சென்னுடன் டேட்டிங் உறவில் இருப்பதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை ஐபிஎல் தொடரின் தலைவராக இருந்த லலித் மோடி, வரி எய்ப்பு, சட்ட விரோத பணப்பரிவர்த்தனை போன்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி 2010ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறினார். லலித் மோடிக்கு மினால் மோடி என்பவருடன் 1991ஆம் ஆண்டு திருமணம் ஆன நிலையில், அவரது மனைவி மினால் புற்றுநோய் பாதிப்பு காரணமாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்தார்.

2010ஆம் ஆண்டில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசித்து வரும் அவர், தற்போது முன்னாள் பிரபஞ்ச அழகியும், நடிகையுமான சுஷ்மிதா சென்னுடன் டேட்டிங் உறவில் இருப்பதாக அறிவித்துள்ளார்.இருவரும் சமீபத்தில் மாலத்தீவு சென்று மகிழ்ச்சியாக பொழுதை கழித்துள்ளதாக லலித் மோடி பதிவு வெளியிட்டு, இருவரின் புகைப்படங்களை ட்விட்டர், இன்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். லலித் மோடி தனது ட்விட்டர் பதிவில், மாலத்தீவுக்கு சென்று தற்போது தான் லண்டன் திரும்பியுள்ளோம். எனது துணையான சுஷ்மிதா சென்னுடன் புதிய வாழ்க்கையை தொடங்குகிறோம். மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்கிறேன். தற்போது டேட்டிங்கில் தான் உள்ளோம். இன்னும், திருமணம் செய்து கொள்ளவில்லை. விரைவில் திருமணம் நடைபெறும் என்றுள்ளார்.

1994ஆம் ஆண்டு பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற சுஷ்மிதா சென், 1996ஆம் ஆண்டு தஸ்தக் என்ற பாலிவுட் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். 1997 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ரட்சகன் படத்தில் நாகர்ஜூனாவுக்கு ஜோடியாக நடித்தவர் சுஷ்மிதா சென். 46 வயதான சுஷ்மிதா சென் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. அதேவேளை, ரினி மற்றும் அலிஷா என்ற இரு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். பிரபல மாடலும், நடிகருமான ரோஷ்மான் ஷால் என்பவருடன் உறவில் இருந்த சுஷ்மிதா சென் 2020ஆம் ஆண்டில் இருவரும் பிரேக்கப் செய்ததாக அறிவித்தனர். தற்போது 56 வயதான லலித் மோடி உடன் டேட்டிங் செய்து வரும் சுஷ்மிதா, விரைவில் அவரை திருமணம் செய்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.