ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சிறந்த பொருளாதார நிபுணருமான ஹர்ச டி சில்வாவை பிரதமராக நியமிக்குமாறு ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழுத்தம் கொடுப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை பிரதமராக நியமிக்குமாறு பதில் அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு விசுவாசமான அமைச்சர்கள் குழுவொன்று கோரிக்கை விடுத்துள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போராட்டக் களத்தில் இளைய சமூகத்தின் ஈர்ப்பு ஹர்ஷ டி சில்வாவிடம் இருப்பதாகவும் நடுத்தர வர்க்க சமூகம் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்கவிடம் அமைச்சர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு ரணில் நல்ல பதிலை அளித்துள்ளதாகவும் மேற்கண்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவும் இவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைத்திருந்ததாக உறுதிப்படுத்தப்படாத வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்படுகின்றது.
கொள்ளுப்பிட்டி வழுகாராமவில் இன்று வெள்ளிக்கிழமை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதில் அரச தலைவராக ரணில் விக்கிரமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
அரச தலைவர் பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச விலகியதன் பின்னர் பிரதமருக்கான அரசியலமைப்பு விதிகளின்படி பதில் அரச தலைவராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார்.
எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள இரகசிய வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளால் புதிய அரச தலைவர் தெரிவு செய்யப்படவுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.