வெப்பக் காற்றால் திணறி வரும் ஐரோப்பிய நாடுகள்.. நூற்றுக்கணக்கில் மக்கள் உயரிழப்பு

0
337

பூகோள அமைப்பில் பூமத்திய ரேகை(Equator), அட்ச கோடு ரேகை(Tropic of Cancer) ஆகியவற்று மேலே இருக்கும் ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலும் வெப்பமான வானிலை நிலவாது. அங்கு 30 டிகிரி வெப்பமே அதிகமான வெப்ப நிலையாக உணரப்பட்டுவந்தது. இந்நிலையில், புவி வெப்ப மயமாதல், கால நிலை மாற்றம் போன்ற சிக்கலால் கடந்த சில ஆண்டுகளாகவே ஐரோப்பாவிலும் சராசரி வெப்பநிலையில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் தற்போது காட்டுத் தீ பரவல் பெருமளவில் நிகழ்ந்து வருகிறது.

ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இந்த காட்டுத் தீ பரவல் பிரச்னை நிலவுவதால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வசிப்பிடத்தை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் தீவிரமடைந்துள்ள காட்டுத் தீ பரவலை கட்டுக்குள் கொண்டுவர ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். அதேபோல்,12,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வசிப்பிடத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். அதேபோல் ஸ்பெயின் நாட்டிலும் வழக்கத்திற்கு மாறாக வெப்பநிலை 45.7 டிகிரியாக பதிவானதால் அங்கு பரவும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். அந்நாட்டில் மட்டும் வெப்ப காற்று தொடர்பான சம்பவங்களில் 360 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் மற்றொரு ஐரோப்பிய நாடான போர்ச்சுகலிலும் 40 டிகிரிக்கும் மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. அந்நாட்டிலும் வெப்ப காற்று காரணமாக 238 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகளுடன் சேர்த்து காட்டு பகுதியின் வளங்களும் சேதம் அடைந்து வருகின்றன. ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலில் சுமார் 10,000 ஹெக்டேர் பரப்பளவு காடுகள் தீக்கிரையாகியுள்ளன. பிரான்சில் 7,300 ஹெக்டேர் பரப்பளவு காடுகள் தீயில் பாதிக்கப்பட்டுள்ளன. இதேபோல், பிரிட்டன் நாட்டின் வரலாற்றிலேயே முதல்முறையாக ரெட் வார்னிங் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அதிகபட்சமாக 38.7 டிகிரி வெப்பம் தான் பிரிட்டனில் பதிவான நிலையில், அங்கு இம்முறை 40 டிகிரி வெப்பத்தை தாண்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதை எதிர்கொள்ள அரசு சார்பில் அவசர குழு அமைக்கப்பட்டுள்ளது.

Previous article‘சோழர்களின் ஆட்சிக்காலம்’ – வரவேற்பை பெறும் பொன்னியின் செல்வன் புதிய வீடியோ
Next articleஅதிகரித்து வரும் கொரோனா… நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 5 யோகாசனங்கள்