
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மக்கள் போராட்டமாக வெடித்து அதன் காரணமாக அந்நாட்டின் அரசாங்கமே ஆட்டம் கண்டுள்ளது. தலைநகர் கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட நிலையில், அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ளார். மேலும், கோத்தபய தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், இடைக்கால அதிபராக ரணில் பதவியேற்றுள்ளார்.
தொடர்ந்து புதிய அதிபர் தேர்வு செய்வதற்கான பணிகள மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் சபாநாயகர் அபவர்தனே, அதிபர் தேர்தல் வரும் 20ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளார். இதற்காக இலங்கை நாடாளுமன்றத்தின் 13 நிமிட சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தாமிகா தசநாயகே அதிபர் பதவி காலியாக உள்ளதாக அறிவித்தார்.
புதிய அதிபருக்கான தேர்வுக்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய் கிழமை நடைபெறும் எனவும், ஒருவருக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில் இதற்கான வாக்கெடுப்பு வரும் புதன்கிழமை நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. 225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சவின் எஸ்எல்பிபி கட்சிக்கு அதிக உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் ரணில் விக்ரமசிங்கவை புதிய அதிபராக ஆதரித்து களமிறக்குகின்றனர்.எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரமதாசாவும் அதிபர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இவர்கள் இருவரும் முன்னணி வேட்பாளர்களாக உள்ள நிலையில், எஸ்ல்பிபி கட்சியில் இருந்து பிரிந்து சென்ற துல்லாஸ் அலபெருமாவும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். ஜேவிபி கட்சியின் தலைவரான அருணா திசநாயகாவும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்.ஆளும் எஸ்எல்பிபி கட்சியின் உறுப்பினர்கள் ரணில் ஆதரவு தெரிவிப்பதால் அவர் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டாலும், யதார்த்தத்தில் உண்மை அவ்வாறு இல்லை. புதிய அதிபருக்கு ஆதாரவாக 113 உறுப்பினர்களின் வாக்குகள் தேவை. ஆளும் எஸ்எல்பிபி கட்சிக்கு 145 உறுப்பினர்கள் உள்ளார்கள். அதேவேளை அவர்களில் 40 பேர் ஆளும் அரசுக்கு எதிராக முரண்பட்டு சுயேட்சையாக செயல்பட்டு வருகின்றனர். மேலும், விக்ரமசிங்கே அதிபாரக போட்டியிடுவதை ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலர் விரும்பவில்லை எனக கூறப்படுகிறது. எனவே, விக்ரமசிங்கேவுக்கு அவ்வளவு எளிதாக பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துவிடாது எனக் கூறுகின்றனர்.
அதேபோல் எதிர்க்கட்சி போட்டியாளரான சஜித் பிரேமதாசவுக்கு அவரது கட்சியின் 55 எம்பிக்கள் ஆதரவு உறுதியாக உள்ளது.சிறுபாண்மையினரான இஸ்லாமிய, தமிழர்களின் ஆதரவு கிடைத்தால் ஆதரவு எண்ணிக்கை 25 அதிகரித்து மொத்த ஆதரவு எம்பிக்கள் எண்ணிக்கை 80 ஆகலாம். இருந்தாலும் சஜித்துக்கு பெரும்பாண்மை இலக்கை தொட மேலும் 33 எம்பிக்களின் ஆதரவு தேவைப்படும்.இந்நிலையில் தான், ஆளும்கட்சியில் இருந்து பிரிந்து தனிக்குழுவாக செயல்படும் துல்லாஸ் அலபெருமா தலைமையிலான எம்பிக்கள் ஆதரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இவர்கள் ராஜபக்ச குடும்பத்தை எதிர்த்து தான் கட்சியில் இருந்து விலகி தனியாக செயல்படுகின்றனர்.
மேலும், ஆளும் கட்சி ரணிலை முன்னிறுத்தியுள்ள நிலையில், அவர் ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமானவராகவே பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் அவரை ரணில் ‘ராஜபக்ச’எதிர்தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். எனவே, சஜித் பிரேமதாச எதிர்தரப்பை ஒருங்கிணைக்கும் பட்சத்தில் அவர்கள் ரணிலுக்கு அதிர்ச்சி வைத்தியம் தரும் வாய்ப்பு கூட உள்ளது.இல்லை என்றால் எதிர்ப்புகளை மீறியும் ரணில் மீண்டும் இலங்கை அரசியலின் மையப்புள்ளியாக உருவெடுப்பாரா என்பது ஜூலை 20ஆம் தேதி தெரியவரும்.
1978ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக இலங்கை அதிபரின் தேர்வு மக்களின் நேரடி வாக்கெடுப்பு மூலம் நடைபெறாமல் எம்பிக்கள் வாக்கெடுப்பு மூலம் நடைபெறவுள்ளது. புதிதாக பொறுப்பேற்கவுள்ள அதிபரின் பதவிக்காலம் 2024ஆம் ஆண்டு நவம்பர் வரை உள்ளது.