லோகேஷ் கனகராஜ் படத்தில் வில்லியாக நடிக்கிறாரா சமந்தா?

0
198

லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள படத்தில் வில்லி கேரக்டரில் சமந்தா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஓடிடி தளத்தில் வெளியான தி ஃபேமிலி மேன் இணைய தொடரில் நெகடிவ் கேரக்டரில் நடித்து சமந்தா மிகப்பெரும் வரவேற்பை பெற்றார். விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தற்போது அடுத்த படத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அடுத்ததாக அவர் விஜய் படத்தை இயக்குவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படம் விஜய்யின் 67வது படமாக அமையும்.

விஜய் தற்போது வாரிசு படத்தின் ஷூட்டிங்கில் இருக்கிறார். விறுவிறுப்பாக வாரிசு படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், செப்டம்பர் மாதத்திற்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பு நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பின்னர் போஸ்ட் புரொடக்சன் பணிகளை முடித்துக்கொண்டு, வாரிசு திரைப்படம் சரியாக பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் விஜய் – லோகேஷ் கனகராஜ் இணையும் தளபதி 67 படத்தில் ஸ்ட்ராங்கான வில்லி கேரக்டர் இடம்பெறவுள்ளது. இதில் நடிப்பதற்கு சமந்தாதான் சரியான நபராக இருக்கும் என்று படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அவரும் இந்த படத்தில் நடிப்பதற்கு விருப்பமாக உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் நடித்த கத்தி, தெறி, மெர்சல் படங்களில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ள நிலையில், தளபதி 67 படத்தில் வில்லியாக மிரட்டவுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளார்கள்.