பூமியின் 98.8 சதவீத பகுதிகளை விட இங்கிலாந்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் – நியூசிலாந்து வானிலை ஆய்வாளர்

0
180

இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வருகிற திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் மிக அதிக வெப்பநிலை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நியூசிலாந்தை சேர்ந்த வானிலை ஆய்வாளர் பென் நோல், இங்கிலாந்தின் வெப்பநிலை முன்னறிவிப்பை உலகின் மற்ற இடங்களுடன் ஒப்பிட்டு வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:- “வரும் செவ்வாய் கிழமை அன்று, ஒருங்கிணைந்த இங்கிலாந்து பகுதியின் வெப்பநிலையானது 41 டிகிரி செல்சியஸ் வரை எட்டும், அதாவது பூமியின் 98.8 சதவீத பகுதிகளில் உள்ள வெப்பத்தை விட அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா, சஹாரா பாலைவனம், பிரான்ஸ், பெல்ஜியம், மத்திய கிழக்கு, இந்தியா மற்றும் மேற்கு சீனா ஆகிய பகுதிகளில் மட்டும் இங்கிலாந்தை போல வெப்பமான சூழல் நிலவும்” என்று கூறினார்.

மேற்கு சஹாரா மற்றும் கரீபியன் பகுதிகளில் உள்ள வெப்பத்தை விட, இங்கிலாந்தில் வெப்பநிலை உயர்ந்து இன்று உலகின் வெப்பமான இடங்களில் ஒன்றாக லண்டன் விளங்கும் என்று வானிலை நிறுவனங்கள் கணித்துள்ளன. யுனைடெட் கிங்டம் என்றழைக்கப்படும் ஒருங்கிணைந்த இங்கிலாந்து பகுதிகளில், அதிக வெப்பமான தினமாக இந்த வாரம் இருக்கக்கூடும், வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸை எட்டும். இங்கிலாந்தில், குறிப்பாக நகர்ப்புறங்களில் இரவு நேரம் மிகவும் சூடாக இருக்கும் என்று வானிலை நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டின சில பகுதிகளில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது. மேலும், நகர்புறங்களில் இரவு நேரத்தில் அதிக அளவு வெப்பம் நிலவும் எனவும் எச்சரித்துள்ளது.

இதனையடுத்து, அதிக வெப்பநிலை காரணமாக திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவி வரும் கடும் வெப்ப சீதோஷணத்தால் நாடு முழுவதும் அவசரநிலையாக கருதப்படுகிறது. அதீத வெப்பம் காரணமாக, இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்தின் சில பகுதிகளுக்கு எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக பாதகமான உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலையாக, 2019 ஜூலை 25 அன்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக தாவரவியல் பூங்காவில் பதிவான 38.7 டிகிரி செல்சியஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleஈரானை கண்டு அமெரிக்கா அச்சம்; மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றத்தை தூண்டுவதாக ஈரான் குற்றச்சாட்டு
Next articleஆப்பிரிக்காவில் வேகமாக பரவும் ‘மார்க்பர்க் வைரஸ் – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை