https://www.facebook.com/groups/1238440233362043/?ref=share
இந்திய சினிமா துறையில் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றான தேசிய திரைப்பட விருதுகள் சிறந்த நடிகர்கள், திரைப்படங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2020-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. பிரஸ் இன்பர்மேஷன் ப்ரூவின் யூடியூப் சேனல் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் இது நேரலையில் ஒளிபரப்பானது.
2020-ல் ஏற்பட்ட கொரோனா தொற்றால், சில படங்கள் மட்டுமே திரையரங்குகளில் வெளியாகின. அந்த வருடம் 8 மாதங்கள் திரையரங்குகள் மூடப்பட்டதால், பல படங்கள் வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டன. சில படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகின. இதற்கிடையே 2020-ம் வருடம் 30 மொழிகளில் 295 படங்கள் தேசிய விருதுக்கு அனுப்பப்பட்டிருந்தன. அதில் எந்தெந்த படங்கள் / நடிகர்கள் தேசிய விருதுகளைப் பெறப்போகிறார்கள் என்பதை அறிந்துக் கொள்ள ஆர்வத்துடன் காத்திருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் தமிழில் சூரரைப்போற்று திரைப்படம், சிறந்தப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை ஆகியப் பிரிவுகளில் மொத்தம் 5 விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.
நடிகர் சூர்யா – சுதா கொங்கரா கூட்டணியில் உருவான சூரரைப்போற்று (Soorarai Potru) திரைப்படம் கொரோனா சூழ்நிலை காரணமாக திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக OTT-யில் வெளியானது. இதனை சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இதில் மோகன் பாபு, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருந்தது. படம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியானது. இந்நிலையில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் சூர்யாவுக்கும், சிறந்த நடிகைக்காக தேசிய விருது அபர்ணா பாலமுரளிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு சிறந்த பின்னணி இசைக்கான விருது இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த படம் ஆகியப் பிரிவுகளிலும் சூரரைப் போற்று திரைப்படம் விருதுகளை வென்றுள்ளது.
அடுத்ததாக இயக்குநர் வசந்தின் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களுக்கு சிறந்த தமிழ் படத்திற்கான விருதும், சிறந்த எடிட்டிங்கிற்கான விருது எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்திற்கும், சிறந்த சப்போர்டிங் நடிகைக்கான விருது லட்சுமி பிரியா சந்திரமெளலிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அசோகமித்ரன், ஆதவன், ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை தழுவி இயக்குநர் வஸந்த் இதனை இயக்கியிருந்தார். படத்தில் லட்சுமி பிரியா சந்திரமொளலி, பார்வதி, கருணாகரன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இளையராஜா இசையில், இயக்குநர் வசந்தே இந்தப் படத்தை தயாரித்தார். படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியானது.
இறுதியாக சிறந்த வசனத்திற்கான தேசிய விருது மண்டேலா படத்தின் இயக்குநர் மடோனா அஸ்வினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அவருக்கு சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. ம்ண்டேலா படத்தை இயக்குநர் பாலாஜி மோகனின் ஓப்பன் விண்டோ நிறுவனத்துடன் தயாரிப்பாளர் சசிகாந்தின் ஒய் நாட் ஸ்டூடியோஸ், ரிலையன்ஸ் எண்ட்டெர்டெயின்மெண்ட், விஷ்பெர்ரி பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களும் இணைந்து தயாரித்திருந்தன. இதில் நடிகர் யோகி பாபு, ஷீலா ராஜ்குமார் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஓட்டுக்கு பணம் பெறுவது தான் படத்தின் கதைகளம். அதனை சுவாரஸ்யமாகவும், சிந்திக்கும் விதத்திலும் இயக்கியிருந்தார் மடோனா அஸ்வின்.