இலங்கையில் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்ட அதிபர் மாளிகை மீண்டும் திறக்கப்படுகிறது

0
404

இலங்கையை நெருக்கியுள்ள பொருளாதார சிக்கலுக்கு தீர்வு காணாத ஆட்சியாளர்களுக்கு எதிராக கடந்த 9-ந் தேதி மக்கள் புரட்சி வெடித்தது. நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகரில் குவிந்து, அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். பின்னர் அதிரடியாக புகுந்து சூறையாடிய அவர்கள், சில நாட்களாக மாளிகைக்குள்ளேயே தங்கினர். அங்கே உண்டு, குடித்து நாட்டின் அதிபர் வாசம் செய்யும் இடங்களை உறைவிடமாக்கிக்கொண்டனர்.இதைப்போல பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான அலரி மாளிகையையும் போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்து இருந்தனர். மக்கள் எழுச்சியை ஆட்சியாளர்களுக்கு உணர்த்திய அவர்கள், பின்னர் தாங்களாகவே அங்கிருந்து வெளியேறினர். அதன் பின்னரே இலங்கை பாதுகாப்பு படையினரால் அதிபர் மற்றும் பிரதமர் அலுவலகங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுக்க முடிந்தது. இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு படையினர் ஆய்வு நடத்தினர். இதில் அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகங்களில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட பழங்கால கலைப்பொருட்கள் மாயமாகி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. மிகப்பெரும் கலைப்பொக்கிஷமாக கருதப்படும் இந்த பொருட்கள் விலை மதிப்பற்றவை ஆகும். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள இலங்கை அரசு மேற்படி பொருட்கள் மாயமானது குறித்து விசாரணை நடத்தவும், அவற்றை கண்டுபிடித்து மீட்கவும் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உள்ளது. அந்த குழுவினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இதற்கிடையே இலங்கையில் நேற்று பதவியேற்ற புதிய மந்திரிசபையின் முதல் கூட்டம் நேற்று அதிபர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் நடந்தது. அதிபர் செயலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் பள்ளிகள் என அனைத்து நிறுவனங்களின் சுமுக செயல்பாடுகளை உறுதி செய்து ஒரு வாரத்துக்குள் நாட்டில் இயல்பு நிலையை கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இலங்கை அதிபர் மாளிகை நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஇந்தியாவில் இருத்து விசா இல்லாமல் 60 நாடுகளுக்குப் பயணம் செய்யலாம்
Next articleஉக்ரைன் ராணுவ வீரர்களுடன் ஆயுத பயிற்சியில் ஈடுபட்ட போரிஸ் ஜான்சன்