Newsஈழத்-தமிழர் அரசியலின் தந்திரோபாய வறுமை மீண்டுமொரு முறை நிரூபணமானது

ஈழத்-தமிழர் அரசியலின் தந்திரோபாய வறுமை மீண்டுமொரு முறை நிரூபணமானது

-

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பெரும்பாண்மை வாக்குகளால் தெரிவாகியிருக்கின்றார். அந்த வகையில் ‘ஒப்பிரேசன் ரணில்’ வெற்றிபெற்றுவிட்டது. இதனை சிலர் ராஜபக்சக்களின் வெற்றியென்று கூறலாம் ஆனால் இந்தக் கட்டுரையாளர் அப்படிக் கருதவில்லை. ஏனெனில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாவதற்கான திட்டங்கள் மிகவும் கச்சிதமாக முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. கோட்டபாய ராஜபக்சவிற்கு எதிராக, கிளர்சிகள் அதிகரித்த போது, நிலைமைகளை சமாளிக்கும் ஒரு உக்தியாகவே ரணில் பிரதமராக நியமிக்கப்பட்டார். ஆனால் ரணில் பிரதமராக நியமிக்கப்பட்ட போதே, ரணில் ஜனாதிபதியாவதற்கான திட்டம் ரணிலிடம் இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இது சாத்தியப்பட்டிருக்காது. ரணில் பிரதமரான போதே, கோட்டபாயவினால் அதிக காலம் பதவியில் நீடிக்க முடியாதென்னும் விடயத்தை ரணில் கணித்திருக்க வேண்டும். கோட்;டபாய விலகியதை தொடர்ந்து, ரணில் பதில் ஜனாதிபதியானார். 69 லட்சம் வாக்குகளால் வெற்றிபெற்ற ஜனாதிபதி ஒருவரின் வீழ்ச்சியை தொடர்ந்து, அதற்கு சமதையான வாக்குகளை பெற்றிருக்கும் 134 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ரணில் ஜனாதிபதியாகியிருக்கின்றார். இப்போது ரணில் கேள்விகளுக்கு அப்பாற்றபட்டவர்.

இந்த விடயத்தை எவ்வாறு கையாளுவது என்பதில்தான், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டுமொரு முறை சறுக்கியிருக்கின்றது. யுத்தத்திற்கு பின்னரான கடந்த 13வருடங்களில், அரசியலை தந்திரோபாய ரீதியில் கையாளும் விடயத்தில் சம்பந்தன் தொடர்ந்தும் தோல்விகளையே சந்தித்திருக்கின்றார். தொடர் தோல்வியில் இப்போது புதிதாக சேர்ந்திருப்பதுதான் டளஸ் அழகப்பெருமவை ஆதரித்த பிரச்சினையாகும். புதிய ஜனாதிபதிக்கான விடயம் விவாதத்திற்கு வந்த நாளிலிருந்தே, தமிழரசு கட்சியை தீர்மானிக்கவல்ல, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பொது வெளிகளில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நிலைப்பாடுகளையே முன்வைத்துவந்தார். சுமந்திரனின், தெரிவு சஜித்பிரேமதாசவாகவே இருந்தது. ஆனால் சஜித்பிரேமதாச திடிரென்று போட்டியிலிருந்து விலகியதை தொடர்ந்து, ராஜபக்சக்களின் பொதுஜன பெரமுனவின் பொருளாளர் டளஸ் அழகப்பெருமவை ஆதரிக்கும் விவகாரம் சூடுபிடித்தது.

ஆனால் இதில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே மாறுபட்ட அப்பிராயங்கள் இருந்ததை தனிப்பட்டரீதியில் இந்தக் கட்டுரையாளர் அறிவார். இவ்வாறானதொரு சூழலில்தான், இதில் கூட்டமைப்பு எடுக்கக் கூடிய ஆகச் சிறந்த முடிவு தொடர்பில், இந்தக் கட்டுரையாளர் சில விடயங்களை வலியுறுத்தியிருந்தார். இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு கடிதமொன்றையும் அனுப்பியிருந்தேன். அதாவது, ஜனாதிபதி போட்டியிலிருந்து கூட்டமைப்பு விலகியிருப்பதுதான், சரியானதென்று சுட்டிக்காட்டியிருந்தேன். இதன் மூலம் ஜனாதிபதியாக எவர் தெரிவு செய்யப்பட்டாலும் அவருடன் பணியாற்றுவதற்கு, புதிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு இலகுவாக இருக்குமென்று வலியுறுத்தியிருந்தேன். ஆனால் வழமைபோலவே, சம்பந்தனும் சுமந்திரனும் பழைய பாணியில் சிந்தித்து, விடயங்களை குழப்பினர்.
தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் சிவில் சமூகம் மற்றும் புத்திஜீவிகள் என்போர் – ஒரு விடயத்தை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, நாம் என்னவகையான அரசியலை மேற்கொள்கின்றோம்? இந்தக் கேள்வியிலிருந்துதான் ஒவ்வொரு விடயங்களை பறறியும் சிந்திக்க வேண்டும். இன்று நாம் முன்னெடுக்கும் அரசியலானது, பிரதிநிதித்துவ ஜனநாயக அரசியலாகும். அதன் ஆற்றலுக்கு ஒரு எல்லையுண்டு. அதாவது, தேர்தல்கள் மூலம் கிடைக்கப்பெறும் பிரதிநித்துவ பலத்தின் அடிப்படையில், பேரம்பேசி விடயங்களை வெற்றிகொள்வதை பற்றித்தான், நாம், இங்கு சிந்திக்க முடியும். இது ஒன்றுதான், தற்போது தமிழர்களிடமுள்ள அரசியல் வறிமுறையாகும்.

இந்த வழிமுறையில் முன்னெடுக்கப்படும் அரசியலின் மூலம் வெற்றிகளை அடைய வேண்டுமாயின், தந்திரோபாயங்கள் மட்டுமே கைகொடுக்கும். அதே வேளை இங்கு வெற்றியென்பது முழுமையானதல்ல என்னும் புரிதலும் நம்மிடமிருக்க வேண்டும். எனவே பெறக் கூடியவைகளை பெறுவதென்பததான் வெற்றியாகும். ஏனெனில், விடயங்கள் தோhல்விடையும் போது, தமிழர் தரப்பில் அரசை, கீறங்கிவரச் செய்வதற்கான மாற்று வழிகள் இல்லை. எனவே முழுமையான அரசியல் வெற்றியென்பது தமிழர் அரசியலின் இலக்காக இருக்கவே முடியாது. உதாரணமாக பேச்சுவார்த்தைகள் தோல்வியடைகின்ற போது, விடுதலைப் புலிகள் அந்தத் தோல்வியை இராணுவ வெற்றிகள் மூலமே சரிசெய்துகொண்டனர். இதன் மூலம் மீளவும் அரசாங்கத்தை தங்களை நோக்கி வரவேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தினர். இவ்வாறான அணுகுமுறை ஆயுதப் போராட்ட அரசியலில் மட்டுமே சாத்தியப்படும். ஜனநாயக அரசியலில் தந்திரோபாயங்கள் மூலம் மட்டுமே நலன்களை வெற்றிகொள்ள முடியும்.

யுத்தம் நிறைவுற்ற காலத்திலிருந்து, கூட்டமைப்பு, ஏனைய தமிழ் தேசிய சிறுகட்சிகள், தமிழ் சிவில் சமூகம், புலம்பெயர் அமைப்புக்கள் என, அனைவரும் பல்வேறு தளங்களில் இயங்கியிருகின்றனர். ஜ.நா மனித உரிமைகள் பேரவையை நோக்கி, இந்தியாவை நோக்கி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருக்கி;ன்றனர். இவைகள் எவையும் தந்திரோபாயங்கள் அல்ல. மாறாக, சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதற்கான செயற்பாடுகள் மட்டுமே. ஒரு குறிப்பிட்டளவு அழுத்தங்களும் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் இவ்வாறான அழுத்தங்களின் ஊடாக, ஏதாவது வாய்ப்புக்கள் கிடைக்கும் போது, அதனை கச்சிதமாக பயன்படுத்திக் கொள்வதுதான் அரசியல் தந்திரோபாயமாகும். ஏனெனில் சர்வதேச அழுத்தங்கள் என்பவை நிரந்தரமானதல்ல. அவை மாற்றமடையக் கூடியவை. கொழும்பின் ஆட்சியாளர்களின் அணுகுமுறைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்ற போது, சிறிலங்காவின் மீதான அழுத்தங்களும் மாற்றமடைந்துவிடும். இந்த இடைப்பட்ட காலத்தில் கிடைப்பதுதான் வாய்ப்புக்கள், அந்த வாய்ப்புக்களை திறம்பட கையாளுவதில்தான் தமிழர் அரசியலின் வெற்றி தங்கியிருக்கின்றது. இந்த விடயங்களை தமிழர் தரப்புக்களால் புரிந்து கொள்ள முடியாமல் போகும் ஒவ்வொரு சந்தர்பங்களிலும், தமிழ் மக்களுக்கு வெறும் சுலோகங்கள் மட்டுமே மிஞ்சும்.

இப்போது மீண்டும் ஜனாதிபதி தெரிவு விவகாரத்திற்கு வருவோம். நான் முன்னர் குறிப்பிட்டது போன்று, ரணிலை எதிர்க்கும் நோக்கில் சிந்திக்காமல், வாக்கெடுப்பில் நடுநிலை வகிப்பதன் மூலம் ரணிலை எதிர்நிலைக்கு கொண்டுபோகாமல் இருந்திருக்கலாம். ஆனால் இந்த ஜனாதிபதி தெரிவின் போது, ஒரு வேளை ரணிலை ஆதரிக்கும் முடிவெடுத்திருந்தாலும் கூட, அது பிரச்சினைக்குரிய ஒன்றல்ல. ஏனெனில், இரண்டு பக்கத்திலுமே மொட்டு அணியினரின் ஆதிக்கம்தான் மேலோங்கியிருந்தது. ஒரு புறம் மொட்டு உறுப்பினர்களின் ஆதரவுடன் ரணில் விக்கிரமசிங்கவும் மறுபுறும் மொட்டு கட்சியின் சார்பில் டளஸ் அளகப்பெருமவும் போட்டியிட்டிருந்த நிலையில், கூட்டமைப்பிற்கு இதில் தலையீடு செய்ய வேண்டிய தேவையிருந்திருக்கவில்லை. ஒரளவு பொருத்தமானவர் என்னுமடிப்படையில் கூட்டமைப்பினர் வாக்களிக்க விரும்பியிருந்தால், ரணில் விக்கிரமசிங்கதான் கூட்டமைப்பினரின் தெரிவாக இருந்திருக்க முடியும். ஏனெனில், ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டமைப்பினர் முன்னர் இணைந்து பணியாற்றியிருந்தனர். இந்த பின்புலத்தில் ரணிலை ஆதிரிப்பதில் பெரிய அரசியல் சிக்கல்கள் இருந்திருக்கவில்லை. எனினும் கொள்கையடிப்படையில் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டிய தேவையிருந்திருப்பின் நடுநிலை வகிப்பதே ஒரேயொரு சிறந்த தெரிவாக இருந்தது. ஆனால் சம்பந்தனால் தந்திரோபாய ரீதியில் செயற்பட்டிருக்க முடியவில்லை. ஏனெனில் அவ்வாறான அரசியல் ஆளுமை அவரிடம் இல்லை, அவரிடம் மட்டுமல்ல, தமிழ் சூழலிலேயே தந்திரோபாயம் தொடர்பான புரிதல் மிகவும் பலவீனமாகவே இருக்கின்றது. அரசியலை வெறும் உணர்வுரீதியில் புரிந்துகொள்வதற்கே பெரும்பாலான தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள் பழக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களை நெறிப்படுத்த வேண்டிய, புத்திஜீவிகள்; மற்றும் கருத்துருவாக்கிகள் மத்தியிலும் தந்திரோபாய அரசியல் சார்ந்து ஆழமான புரிதல்கள் இல்லை. அவர்களில் அனேகரும் உணர்வுரீதியாகவே விடயங்களை அணுக முற்படுகின்றனர். தாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை சிறிலங்கா ஏற்றுக்கொள்ளாவிட்டால், அரசை இறங்கிவரச் செய்வதற்கான மாற்றுவழிகள் தொடர்பில் எவரும் பேசுவதில்லை. ஏனெனில் அவர்களுக்கு அது தெரியாது.

உதாரணமாக சிலர் இடைக்கால அரசாங்கம் பற்றி கற்பனைகளை முன்வைக்கின்றனர். அதனை ஏற்றுக்கொள்ளாவிட்டால் தமிழர் தரப்புக்கள் என்ன செய்யும்? விடுதலைப் புலிகள் பாணியில் தாக்குதலை தொடுப்பீர்களா? பொத்துவில் தொடங்கி பொலிகண்டி போன்ற நடவடிக்கைகளால் கொழும்மை இறங்கிவரச் செய்ய முடியாது. ஏனெனில் வடக்கு கிழக்கில் இடம்பெறும் இது போன்ற நடவடிக்கைகளால் கொழும்பின் நிர்வாகம் முடங்கப்போவதில்லை. அண்மையில் இடம்பெற்ற சிங்கள இளைஞர்களின் பொருளாதார நெருக்கடி கோபம், எவ்வாறு கொழும்மை இறங்கிவரச் செய்தது என்;பது ஒரு நல்ல உதாரணமாகும். அவ்வாறான ஒரு நடவடிக்கையை வடக்கு கிழக்கில் மேற்கொண்டிருந்தால், அது கொழும்பிலுள்ளவர்களுக்கு ஒரு புதினமாகவே இருந்திருக்கும்.

எனவே விடயங்களை தொகுத்து நோக்கினால் தந்திரோபாயரீதியில் தீர்மானங்களை எடுக்க வேண்டிய ஒவ்வொரு சந்தர்பங்களிலும், சம்பந்தன் இடறிவிழுபராகவே இருந்திருக்கின்றார். இதற்கு என்ன காரணம்? சம்பந்தன் அரசியலில் காலாவதியாகிவிட்டார். சம்பந்தன் மட்டுமல்ல இன்னும் பலரும் அவ்வாறான நிலையில்தான் இருக்கின்றனர். ஆனால் தமிழ் வாக்காளர்களின் அறியாமையும், ஞாபக மறதியும் அவ்வாறானவர்களை காப்பாற்றிக் கொண்டிருக்கின்றது. தந்திரோபாய அரசியலுக்கு முன்னுரிமையளிக்கின்ற, வெறும் உண்ர்ச்சிகர அரசியலுக்கு மயங்காத ஒரு புதிய தலைமுறை தமிழ் தேசிய அரசியலை கைப்பற்றாதவரையில், இவ்வாறான பழம் அரசியலில் எந்தவொரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை. சில தினங்களுக்கு முன்னர் ஒரு சிங்கள சட்டத்தரணியோடு பேசிக் கொண்டிருந்த போது, அவர் ஒரு விடயத்தை குறிப்பிட்டார். அடுத்த தேர்தலில் குறைந்தது எழுபதிற்கு மேற்பட்ட புதியவர்கள், இளைஞர்கள், தெற்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வரக்கூடும் என்றார். கூடவே, தமிழ் பகுதியில் நிலைமையென்ன என்று கேட்டார். தமிழ் வாக்காளர்களை நம்பி எவ்வாறு பதிலளிக்க முடியும்?

நன்றி – யதீந்திரா

Latest news

பாக்டீரியாக்களை கொல்லும் ஒருவகை சிப்பி இனம்

ஆஸ்திரேலிய சிப்பியின் ஒரு இனம் உடலில் உள்ள பாக்டீரியாக்களை கொல்லும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வை சதர்ன் கிராஸ் பல்கலைக்கழகம் நடத்தியது. Sacostria glomerata எனப்படும்...

ஆஸ்திரேலியாவிலிருந்து மேலும் இரண்டு நாடுகளுக்கு மனிதாபிமான விசாக்கள்

சுமார் ஆயிரம் பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலியர்களுக்கு ஆஸ்திரேலியாவால் தற்காலிக மனிதாபிமான விசா வழங்கப்பட்டுள்ளது. ஹமாஸ்-இஸ்ரேல் மோதலால் பாதிக்கப்பட்ட இரு நாடுகளின் குடிமக்களுக்கு அக்டோபர் 2024 முதல் தற்போது...

ஆஸ்திரேலியர்கள் பின்பற்றும் மதங்கள் குறித்து வெளியான ஆய்வு

ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகைக்கு ஏற்ப அவர்கள் பின்பற்றும் மதங்கள் குறித்த புதிய அறிக்கையை மக்கள்தொகை மற்றும் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலிய மக்கள் தொகையில் 20 சதவீதம்...

ஆஸ்திரேலிய மாநிலங்களில் அதிகரித்துவரும் வெப்பநிலை

மேற்கு ஆஸ்திரேலியாவில் நேற்று அதிகபட்சமாக 49.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த கோடையில் பெர்த் பெருநகர விமான நிலையத்தில் வெப்பநிலை 44.7 டிகிரியாகவும், நகரின் வெப்பநிலை...

கடந்த சில நாட்களாக விக்டோரியா சாலையில் அதிகரித்துள்ள விபத்துக்கள்

மெல்பேர்ண் கிழக்கில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த நபர் இதுவரை உத்தியோகபூர்வமாக அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மவுண்ட் ஈவ்லினில் உள்ள கிளெக் வீதியில் சாரதி...

உலகின் முதல் டிரில்லியனர் பற்றிய புதிய வெளிப்பாடு

உலகின் மிகப் பெரிய பணக்காரர்களின் சொத்துக்கள் குறித்த சமீபத்திய புதுப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, எலோன் மஸ்க் மீண்டும் உலகின் பணக்காரர் என்ற பெயரைப் பெற்றுள்ளார். நேற்றைய நிலவரப்படி அவரது...