COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 5 வீதமானோருக்கு நீண்ட காலம் ருசி அல்லது மணம் தெரியவில்லை என்று பெரிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள் கூறுகின்றன.
COVID-19 தொற்று தொடங்கிய காலம் முதல், மணம் தெரியாமல் போவது முக்கிய அறிகுறியாக இருந்தது.
ஆனால் அது எவ்வளவு காலம் நீடிக்கிறது? விட்டு விட்டு ஏற்படுகிறதா ? போன்ற கேள்விகளுக்கு விடை கண்டறியப்படாமல் இருந்தது. அதைக் கண்டறிய, 3,700 நோயாளிகளைக் கொண்டு இதுவரை நடத்தப்பட்ட 18 ஆய்வுகள் ஆராயப்பட்டன.
நோய் ஏற்பட்ட ஆறாவது மாதத்துக்குப் பிறகும், 4 வீதமான நோயாளிகளுக்கு மணங்கள் தெரியவில்லை; 2 வீதமானோருக்கு ருசி தெரியவில்லை என்று BMJ சஞ்சிகையில் வெளியிடப்பட்ட அந்தப் புதிய ஆய்வு கூறுகிறது.
இருப்பினும் அவர்கள் முழுமையாக குணமடைந்தவர்களா, இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆய்வின் முடிவாக நீண்ட காலம் மணம் தெரியாமல் இருப்பவர்கள் 5.6 வீதமானோருக்கு ருசி தெரியாமல் இருப்பவர்கள் 4.4 வீதம் என்று கூறப்பட்டது.
மணத்தை, ருசியை அறிய முடியாத பிரிவினரில் பெண்கள் அதிகமாக இருந்ததையும் ஆய்வு சுட்டியது.