இளையராஜா இசைப்பள்ளியையும், கமல் ஹாசன் நடிப்புப் பள்ளியையும் துவங்க பிரபல இயக்குநர் விருப்பம்

0
365

இசைஞானி இளையராஜா இசைப்பள்ளியையும், நடிகர் கமல் ஹாசன் நடிப்புப் பள்ளியையும் துவங்க வேண்டும் என தான் விரும்புவதாக இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் தெரிவித்துள்ளார்.தமிழ், மலையாளம் என இருமொழிகளில் உருவான ‘நேரம்’ படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன், கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதோடு, அடிக்கடி தனது எண்ணங்களையும் கேள்விகளையும் அதில் தெரியப்படுத்தி வருகிறார்.

நிவின் பாலி மற்றும் சாய் பல்லவி நடிப்பில் தனது இரண்டாவது படமாக ‘பிரேமம்’ படத்தை இயக்கி புகழ்பெற்றார். இவர் தற்போது இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா ஒரு இசைப் பள்ளியைத் தொடங்க வேண்டும் என்றும், கமல் ஹாசன் நடிப்புப்பள்ளியை துவங்க வேண்டும் என்றும் தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.இளையராஜாவின் இசைப் பள்ளியில் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களான கீரவாணி, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், தேவா, அனிருத் ஆகியோருடன் கார்த்திக் ராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் பேராசிரியர்களாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதோடு நடிகர் கமல் ஹாசன் நடிப்பு பயிற்சி பள்ளி ஒன்றை துவங்கி, நடிப்பில், இயக்கத்தில் ஆர்வமுடன் இருக்கும் குழந்தைகளுக்கு தினமும் 45 நிமிடம் வகுப்பெடுக்க வேண்டும் என்றும் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். ஒருவேளை அவர் அப்படி நடிப்பு பயிற்சி பள்ளியை துவங்கினால், இயக்குநர்கள் பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர், பாசில், பிரியதர்ஷன், எஸ்.எஸ்.ராஜமெளலி, சந்தான பாரதி ஆகியோர் விசிட்டிங் பேராசிரியர்களாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதோடு, கமல் ஹாசன் நினைத்தால் கிறிஸ்டோபர் நோலனை விசிட்டிங் பேராசிரியராக நியமித்து, திரைப்பட இயக்கத்தில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து வகுப்பெடுக்கலாம் என்றும், ஒருநாள், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கேமரூன் ஆகியோர் மாணவர்களுக்கு வகுப்பெடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேற்கூறிய அனைவரும் தங்களது படங்களின் மூலம் தனக்கு விர்ச்சுவல் பேராசிரியர்களாக இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார் அல்போன்ஸ் புத்திரன்.

Previous articleஅமெரிக்காவுடன் போர் மூண்டால் அணுஆயுதம் பயன்படுத்தப்படும்.. வடகொரியத் தலைவர் கிம் எச்சரிக்கை
Next articleஉணவில் அதிக உப்பு சேர்ப்பவரா நீங்கள்..? ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!