Newsதந்திரம் பழகு

தந்திரம் பழகு

-

“அரசியல் என்பது சதுரங்கத்தை விட மேலானது. அது துடுப்பாட்டத்தைப்போல ஒரு குழுச்செயற்பாடு.மரதன் ஓட்டத்தைப்போல அதற்கு ஒரு திராணி இருக்க வேண்டும்.நீங்கள் ஞாபகத்தில் வைத்திருக்கவேண்டும்….அது ரகர் விளையாட்டைப்போல கடினமானது,குத்துச்சண்டையைப்போல,ரத்த விளையாட்டு…..”இது ரணில் விக்கிரமசிங்க கூறியது.அவர் சதுரங்கம் விளையாடுவது போன்ற ஒரு காணொளியின் பின்னணியில் இவ்வாறு கூறுகிறார்.இந்த வசனங்களை அவருக்கு எழுதிக் கொடுத்தது தமிழ் ஊடக முதலாளியான ராஜமகேந்திரன் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

இப்பொழுது ரணில் ஆட்சிக்கு வந்திருக்கிறார்.மஹிந்தவை,கோட்டாவை நீக்கியதுபோல ரணிலையும் அரகலியக்காரர்கள் துரத்துவார்களாக இருந்தால் நிலைமை வேறு.இல்லையென்றால் அடுத்த இரண்டு வருடத்திற்கும் நான்கு மாதங்களுக்கும் அவர்தான் ஜனாதிபதி.தமிழ்மக்கள் அவரோடுதான் பேச வேண்டும்.அவரோடு தான் போராடவும் வேண்டும்.

அவர் ஒரு நரி என்று அன்ரன் பாலசிங்கம் கூறினார்.அவருடைய மாமனார் ஜெயவர்த்தனாவையும் குள்ளநரி என்று அழைப்பார்கள்.இப்பொழுது அரகலியக்காரர்களும் அவரை குள்ளநரி என்று அழைப்பதாக தகவல். அரகலவின் மீது அவர் தாக்குதலை நடாத்த முன்னரே மனோகணேசன் அது தொடர்பாக ஒரு குறிப்பை முகநூலில் போட்டிருந்தார்.

ஓர் அரசியல்வாதியை ஏன் நரி என்று அழைக்க வேண்டி வருகிறது? ஏனென்றால் அவர் தந்திரம் செய்கிறார் என்பதனால்.ஓர் அரசியல்வாதி ஏன் தந்திரம் செய்கிறார் ? ஒன்றில் தன்னை காப்பாற்றச் செய்கிறார். அல்லது தன் கட்சியைக் காப்பாற்றச் செய்கிறார்.அல்லது தன் மக்களைக் காப்பாற்றச் செய்கிறார்.ரணில் யாருக்காக தந்திரங்கள் செய்கிறார்?தனக்காகவா? கட்சிக்காகவா?நாட்டுக்காகவா?மூன்றுக்கும் ஆகத்தான்.இதை இன்னும் தெளிவாகச் சொன்னால் அவர் சிங்கள மக்களுக்காக சிங்கள பௌத்த அரசை காப்பாற்றுவதற்காக தந்திரங்கள் செய்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம்.

இலங்கைத் தீவு ஒரு குட்டித்தீவு. இந்து மகாசமுத்திரத்தில் கேந்திர முக்கியத்துவம் மிக்க ஒரு கடல்வழியில் அமைந்திருக்கிறது. ஒருபுறம் பிராந்தியப் பேரரசு. இந்தியப் பேரரசின் செல்வாக்கு வலையத்துக்குள் இலங்கை காணப்படுகிறது. அதேசமயம் சீனாவின் பட்டியும் பாதையும் வியூகம்,அதற்கு எதிரான அமெரிக்காவின் இந்தோபசுபிக் வியூகம் ஆகிய இரண்டு வியூகங்களும் ஒன்றை மற்றதை வெட்டும் புள்ளியில் இலங்கை காணப்படுகிறது.அதாவது மூன்று பேரரசுகளின் இழிவிசைகளுக்குள் சிக்குண்டிருக்கும் ஒரு குட்டித் தீவு.இதுகாரணமாக இச்சிறிய தீவின் தலைவராக வரும் யாரும் தந்திரந்தான் செய்யலாம்.வீரங்காட்ட முடியாது.புஜபல பராக்கிரமத்தை காட்டமுடியாது. உக்ரைனின் தலைவர் செலென்ஸ்கி போல வீரங்காட்டுவது என்று சொன்னால்,அதற்கு,அமெரிக்காவும் நேட்டோவும் ஐரோப்பிய யூனியனும் பின்னால் நிற்க வேண்டும்.ஆனால் இலங்கைத்தீவின் நிலைமை அப்படியல்ல. ராஜபக்சக்கள் அதற்கு ஆகப்பிந்திய முன்னுதாரணம்.எனவே சிறிய இலங்கைத் தீவின் தலைவராக வரும் ஒருவர் அதிலும் குறிப்பாக உள்நாட்டில் மக்களாணை இல்லாத ஒருவர் ஜனவசியம் குறைந்த ஒருவர்,என்ன செய்யலாம்?

ரணில் இயல்பாகவே புஜபல பராக்கிரமத்தைக் காட்டுபவர் அல்ல.அதற்குரிய தோற்றமும் அவருக்கு இல்லை.ராஜபக்சக்களைப் போல அட்டகாசமான ஜனவசிய அரசியல் அவருக்குக் கைகூடி வராது.அதற்குத் தேவையான மிடுக்கான தோற்றமும் அவருக்கு இல்லை.சோர்ந்த வாடிய தோற்றம். அழுத்தம் இல்லாத குரல்.புத்திசாலித்தனமாக ஆனால் கவர்ச்சியற்ற குரலில் கதைப்பார்.

சிங்களபௌத்த பெருந்தேசியவாதத்தின் உள்நாட்டு ஆடைகளான வேட்டி நஷனலோடு அவரைக் காணமுடியாது.எப்பொழுதும் மேற்கத்திய தோற்றத்தோடுதான் காணப்படுவார்.ஒரு சிங்கள பௌத்தராக இருந்த போதிலும் கடும்போக்கு சிங்களவர்கள் அவரை கிறிஸ்தவ பின்னணியோடு பொருத்தித்தான் பார்க்கிறார்கள்.அவரை சிங்கள பௌத்தத்தின் விட்டுக் கொடுப்பற்ற காவலனாகப் பார்க்கவில்லை.

நோர்வேயின் அனுசரணையுடனான சமாதான முயற்சிகளில் தொடங்கி இன்றுவரையிலும் அவர் உள்நாட்டில் மிகப்பலவீனமான ஒரு தலைவர்.சிங்கள பௌத்தத்தின் தந்திரமான முகத்துக்குத்தான் அவர் தலைமை தாங்கலாம். சிங்களபௌத்த பெருந்தேசிய வாதத்தின் கூட்டு உளவியலானது அட்டகாசமான யுத்த வெற்றிவாதத்துக்கு தலைமை தாங்கும் தலைவர்களைத்தான் தெரிவு செய்தது.ஆனால் யுத்தவெற்றி நாயகர்கள் நாட்டின் கருவூலத்தைத் திருடியதால் வந்த விளைவினால் ரணிலுக்கு லொத்தர் விழுந்தது. இது அவருடைய வாழ்வின் கடைசி ஓவர். இந்த ஓவரிலாவது அவர் தன்னை நிலைநிறுத்த வேண்டும்.

அவருடைய முதலாவது பலம் புத்திசாலித்தனம். இரண்டாவது பலம் அவருக்கு மேற்கு நாடுகளின் மத்தியில் உள்ள அங்கீகாரம்.இந்த இரண்டுமே தமிழ் மக்களின் நோக்குநிலையில் இருந்து பார்த்தால் பாதகமானவை.அவர் புத்திசாலித்தனமாக தமிழ் அரசியலைக் கையாள்வார்.புத்திசாலித்தனமாக மேற்கத்திய அரங்கில் தமிழ் லொபியைக் கையாள்வார்.

இதை எதிர்கொள்ள தமிழ்மக்கள் நாட்டுக்குள்ளேயும் வெளியேயும் என்ன செய்ய வேண்டும்?தமிழ் மக்களும் தந்திரம் செய்யவேண்டும்.தனது புத்திசாலித்தனத்தையும் சூழ்ச்சிகளையும் தன்னுடைய பலமாகக் கருதும் ஒரு தலைவருக்கு அதே மொழியில் தமிழ்மக்கள் பதில் கூற வேண்டும்.

சிங்கள மக்களைப் போலவே,தமிழ் மக்களும் பேரரசுகளின் முத்தரப்பு இழுவிசைகளுக்குள் சிக்குண்டிருக்கும் சிறிய மக்கள்கூட்டம் ஆவர்.சிங்கள மக்களைப் போலன்றி அரசற்ற ஓரினம்.எனவே தமிழ்மக்கள்தான் அதிகம் தந்திரம் செய்ய வேண்டும்.

மு.திருநாவுக்கரசு,பேராசிரியர் சிவத்தம்பி போன்றவர்கள் கூறுவார்கள்,எதிரி தான் தமிழ்த் தேசியத்தின் பலம் என்று.அதாவது அடக்குமுறைதான் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுகிறது என்ற பொருளில். அதாவது,வெளிப்படையான இனவாதி தென்னிலங்கையில் ஆட்சிக்கு வரும்பொழுது அது தமிழ்மக்களை பலப்படுத்தும் என்றும்,லிபரல் முகமூடி அணிந்த இனவாதி ஆட்சிக்கு வரும்பொழுது அது அனைத்துலக அளவில் தமிழ் மக்களுடைய நியாயத்தை பலவீனப்படுத்தும் என்றும் தமிழ்மக்களில் பெரும்பகுதியினர் நம்புகிறார்கள்.

ஆனால் இங்கே பிரச்சனை என்னவென்றால் வெளிப்படையான இனவாதியோ அல்லது மனித முகமூடி அணிந்த இனவாதியோ யாராக இருந்தாலும் தமிழ் மக்கள் செயல்பட வேண்டும்.தமிழ்மக்கள் போராட வேண்டும்.தமிழ்மக்கள் செயல்படாதவிடத்து தென்னிலங்கையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் எதுவும் நடக்கப் போவதில்லை என்பதைத்தான் கடந்த 13ஆண்டுகள் நிரூபித்திருக்கின்றன.

இப்பொழுது மனித முகமூடி அணிந்த சிங்களபௌத்த பெருந்தேசிய வாதியான ரணில் ஆட்சிக்கு வந்திருக்கிறார்.அவர் மனித முகமூடி அணிந்திராத வெளிப்படையான இனவாதக் கட்சியான தாமரைமொட்டு கட்சியின் ஆதரவில் தங்கியிருக்கும் ஒரு ஜனாதிபதி.

பொருளாதார நெருக்கடிகளின் விளைவுகளின் விளைவு அவர்.பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஏற்பட்ட மக்கள் எழுச்சிகளின்-அரகலயவின்- விளைவாகத்தான் அவருக்கு இந்த பதவி கிடைத்தது.அரகலய அவரையும் அகற்றவேண்டும் என்று போராடுகிறது.அண்மை நாட்களாக அரகலயவை அச்சுறுத்தும் நோக்கத்தோடு ரணில் பல செயற்பாட்டாளர்களை கைது செய்து வருகிறார்.பலர் தலைமறைவாகி வருவதாகத் தெரிகிறது.இதன்மூலம் ஒன்றில் அரகலய புதிய வேகமெடுக்கும் அல்லது நீர்த்துப்போகும்.அரகலயவை வெற்றிகரமாகக் கையாளாவிட்டால் ரணிலுடைய கனவுகள் நிறைவேறாது.

அதே சமயம் உள்நாட்டில் மிகவும் பலவீனமான ரணில் விக்ரமசிங்கவை மேற்கு நாடுகள் எப்படியும் பாதுகாக்க முயற்சிக்கும். மேற்கு நாடுகளை பொறுத்தவரை கத்தியின்றி,ரத்தமின்றி,தேர்தலின்றி ஓர் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இந்த மாற்றத்தை எப்படியாவது பலப்படுத்தத்தான் அவர்கள் பார்ப்பார்கள். எனவே ரணிலை தோற்றுப்போக விடமாட்டார்கள்.ரணிலை பாதுகாப்பதா? அல்லது தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதா? என்ற கேள்வி வரும் பொழுது மேற்குநாடுகள் இரண்டுக்கும் இடையில் ஒரு சமநிலையை கண்டுபிடிக்க முற்படும்.இது ஏறக்குறைய 2015ல் இருந்து 2018 வரையிலும் காணப்பட்ட ஒரு நிலைமைதான்.இது ஐநா மனித உரிமைகள் பேரவையிலும் எதிரொலிக்கும்.

எனவே ரணிலை எதிர் கொள்வதற்கு தமிழ்மக்கள் தயாராக வேண்டும். அவரை எதிர்கொள்வது என்பது தனிய அரகலயவோடு கைகோர்ப்பது மட்டுமல்ல. அதற்குமப்பால் அவருடைய தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் எதிர்கொள்வதற்கு தமிழ்மக்களும் அரசியலை அறிவுபூர்வமாக, விஞ்ஞானபூர்வமாக,கணிதமாக முன்னெடுக்க வேண்டும்.

ஒரு பெரிய இனத்தின் தலைவர்,அரசுடைய இனத்தின் தலைவர், தந்திரசாலியாக இருக்கிறார் என்று சொன்னால்,அரசற்ற சிறிய இனம் அதைவிட அதிகமாகத் தந்திரத்தைக் கைக்கொள்ள வேண்டும். எங்களுடைய பக்கம் நீதி இருக்கிறது என்பதற்காக உலகம் எங்களை நீதியாக நடத்தும் என்று எதிர்பார்ப்பது அப்பாவித்தனமானது. ஆபிரிக்கப் பழமொழியொன்று உண்டு” நீ நீதியாக இருப்பதனால் உலகம் உன்னிடம் நீதியாக நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க்காதே,அது,நீ சிங்கத்தைச் சாப்பிட மாட்டாய் என்பதற்காக சிங்கம் உன்னை சாப்பிடாது என்று நம்புவதைப் போன்றது ” என்று.

ஆம்.தமிழ்மக்கள் தமது பக்கம் நீதி இருக்கிறது என்று நம்பிக்கொண்டு வாழாயிருக்க முடியாது.அரசியலை ஆகக்கூடியபட்சம் அறிவுபூர்வமாக, விஞ்ஞானபூர்வமாக அணுக வேண்டும்.

நடந்து முடிந்த ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு தமிழ்க்கட்சிகளின் இயலாமையை நிரூபித்திருக்கிறது.தமிழ்மக்கள் ஒரு தேசமாக இல்லை என்பதனை நிரூபித்த ஒரு வாக்கெடுப்பு அது.அதேசமயம் சிங்களக்கட்சிகள் அரசியல் எதிரிகளாக இருந்த போதிலும்கூட தேவை கருதிய,தந்திரோபாயக் கூட்டுக்களை ஏற்படுத்திக் கொள்ளமுடியும் என்பதனை நிரூபித்த ஒரு வாக்கெடுப்பு அது.

படித்த தமிழர்கள் சிங்கள மக்களை “மோடையா”க்கள் என்று கிண்டலாகக் குறிப்பிடுவதுண்டு. ஆனால் அது உண்மையல்ல, நடைமுறையும் அல்ல.தமிழ் மக்கள்தான் முட்டாள்தனமாக அரசியல் செய்து வருகிறார்கள்.தமிழ்மக்களிடம் தேர்தல்மைய அரசியலும் அதற்குரிய நெளிவு சுழிவுகளோடு இல்லை. மக்கள் இயக்கமும் இல்லை.

இப்பொழுது திரும்பவும் ரணில் வந்துவிட்டார்.தமிழ்மக்கள் தந்திரம் பழக வேண்டும்.தாங்கள் செய்ய விரும்புவதை எதிரியை கொண்டு செய்விப்பதுதான் மென்சக்தி அரசியல். எதிரி செய்ய நினைப்பதைத் தானே செய்வது அப்பாவி வெள்ளாடுகளின் அரசியல்.ரணில் ஒரு தந்திரமான நரி என்றால் தமிழ் மக்கள் அதைவிடத் தந்திரமான நரிகளாக மாற வேண்டும்.அப்பாவி வெள்ளாடுகளாக வெறுவாய் சப்பிக் கொண்டிருக்கக் கூடாது.

நன்றி – நிலாந்தன்

Latest news

கர்தினால் பதவிக்கு நியமிக்கப்பட்ட மெல்பேர்ண் பிஷப்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமிக்கப்படும் 21 புதிய கர்தினால்களில் ஒருவராக மெல்பேர்ண் பிஷப் மைகோலா பைச்சோக் தெரிவு செய்யப்பட்டுள்ளார். உக்ரேனிய கிரேக்க கத்தோலிக்க திருச்சபையின் பிஷப் மைகோலா...

கடுமையான ஆபத்து காரணமாக திரும்பப் பெறப்படும் எரிவாயு சிலிண்டர்கள்

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பன்னிங்ஸ் பல்பொருள் அங்காடியால் விற்கப்பட்ட பல எரிவாயு சிலிண்டர்கள் பாதுகாப்புக் காரணத்தால் திரும்பப் பெறப்பட்டுள்ளன. Swap N Go பிராண்டுடன் கூடிய 8.5...

வெளியாகியுள்ள குளிர்காலத்தில் விக்டோரியர்கள் செய்த தவறுகளின் பதிவு

கடந்த ஜுன் மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் ஆரம்பம் வரையிலான பனிப் பருவத்தில் பல்வேறு குற்றங்களுக்காக 1100க்கும் மேற்பட்ட சாரதிகளை விக்டோரியா பொலிஸார் கைது செய்துள்ளதாக...

ஆஸ்திரேலியர்கள் கடனைத் திருப்பிச் செலுத்தாததற்கான மற்றொரு காரணம் என்ன தெரியுமா?

அவுஸ்திரேலியாவில் பல கடனாளிகள் வட்டி விகிதக் குறைப்புக்காகக் காத்திருப்பதால் மாதாந்தம் பல பில்லியன் வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜூன் 2024 இல் அடமானம்...

கடுமையான ஆபத்து காரணமாக திரும்பப் பெறப்படும் எரிவாயு சிலிண்டர்கள்

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பன்னிங்ஸ் பல்பொருள் அங்காடியால் விற்கப்பட்ட பல எரிவாயு சிலிண்டர்கள் பாதுகாப்புக் காரணத்தால் திரும்பப் பெறப்பட்டுள்ளன. Swap N Go பிராண்டுடன் கூடிய 8.5...

பெர்த்தில் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த வளர்ப்பு நாய்

பெர்த்தில் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த வளர்ப்பு நாயின் உரிமையாளர்கள் இந்த சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அதிகாரிகளிடம் பதில் கோரி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பெர்த்தின் கேனிங் வேல்...