இந்தியாவின் எதிர்ப்பிற்கு வழிவகுத்த சீன ஆய்வுக் கப்பலுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளமையால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை இந்த கப்பலுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என கருதப்பட்ட நிலையில் குறித்த கப்பலின் வருகைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நேரத்தில் இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கையை சுதந்திரமாக நடைமுறைப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென அதிகாரிகள் கூறுகின்றனர்.
வடமேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் விண்வெளி செயற்கைக்கோள் நடவடிக்கைகளை கண்காணிக்க வரும் யுவான் வாங்-5 கப்பல் ஒகஸ்ட் 11ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய உள்ளது.
எரிபொருள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெற்றுக்கொள்வதற்காக குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஒரு வாரத்திற்கு நங்கூரமிடப்பட உள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இந்தக் கப்பலின் வருகை தொடர்பில் எதிர்ப்பு வெளியிட்டுள்ள இந்தியா, இலங்கை அதற்கு அனுமதி வழங்கியமை தொடர்பில் கடும் அதிருப்தி நிலையில் இருப்பதாக கூறப்படுகின்றது.