பிரித்தானியாவில் பேர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வருகின்ற 22வது பொதுநலவாய விளையாட்டு விழாவில் யாழப்பாணத்தை சேர்ந்தவர் முதல் முறையாக கலந்து கொள்ளவுள்ளார்.
22வது பொதுநலவாய விளையாட்டு விழாவின், கூடைப்பந்தாட்ட (3×3) போட்டிக்கான இலங்கை ஆண்கள் அணியில் யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த யோகானந்தன் சிம்ரோன் இடம்பிடித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேசப் பாடசாலையின் பழைய மாணவரான இவர், பாடசாலை காலங்களில் யாழ் மாவட்டத்தின் நட்சத்திர வீரராக அறியப்பட்டவர்.
தொடர்ந்து 2018ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை தேசிய கூடைப்பந்து அணியின் இறுதி 15 பேர் கொண்ட குழாத்தில் சிம்ரோன் இடம்பெற்றுள்ளார்.
2018ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட கூடைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் மற்றும் மலேஷியாவில் நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட ஆசிய கூடைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் என்பவற்றில் சிம்ரோன் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்துள்ளார்.
இலங்கை கூடைப்பந்து அணியின் முன்கள வீரராக திகழும் யோகானந்தன் சிம்ரோன், பொதுநலவாய போட்டிகளில் யாழ்ப்பாணத்திலிருந்து கலந்துகொள்ளும் முதலாவது கூடைப்பந்தாட்ட வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
சிம்ரோனின் இந்த வெற்றி பயணத்திற்கு பங்காற்றிய பயிற்சியாளர் திரு ஜெயபாலன் ஜெசிந்தனுக்கும் யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்திற்கும், யாழ்ப்பாண வீரனுக்கும், கூடைப்பந்தாட்ட அணி மற்றும் பொதுநலவாய போட்டிகளுக்கான 165 வீரர்களை கொண்ட குழாமுக்கும் மக்கள் தங்கள் வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.