இளம் தலைமுறையினர் இடையே அதிகமாக பயன்படுத்தப்படும் சோசியல் மீடியாவான இன்ஸ்டாகிராம் பிரபலமானது. இந்திய மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்த டிக்-டாக் தடையை தொடர்ந்து, இன்ஸ்டாகிராம் அசுர வளர்ச்சியை எட்டியது. டிக்-டாக் தடை செய்யப்பட்ட இரண்டு மாதத்திலேயே மெட்டாவின் புகைப்படம் மற்றும் வீடியோ பகிர்வு தளமான இன்ஸ்டாகிராம், செப்டம்பர் 2020 அன்று ஷார்ட் வீடியோக்களுக்காக ரீல்ஸ் என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியது.
ஜனவரி முதல் ஜூன் வரை இந்தியா முழுவதும் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோரில் 11 கோடியே 87 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமை டவுன்லோடு செய்துள்ளனர். அதேபோல் ஃபேஸ்புக்கை 8 கோடியே 66 லட்சம் பேர் டவுன் லோடு செய்துள்ளனர். சென்சார் டவர் தரவுகளின் படி, ஷார்ட் வீடியோ ஆப்கள் 24,200,000 முதல் 40,800,000 வரை டவுன் லோடு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது யூஸர்களை கவர்ந்திழுப்பதற்காக சில புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியது. கன்டென்ட் கிரியேட்டர்களின் வீடியோவை பார்க்க விரும்பும் யூஸர்கள் இனி பணம் செலுத்த வேண்டும், யூஸர்கள் தங்களது போட்டோக்களை பயன்படுத்தியும் ரீல்ஸ் வீடியோக்களை உருவாக்கலாம், வீடியோ ஸ்கிரீனின் அளவில் மாற்றம் போன்ற சிறப்பம்சங்களை கொண்டு வந்தது. ஆனால் இன்ஸ்டாகிராமில் கொண்டு வரப்பட்டும் புதிய மாற்றங்கள் அனைத்துமே டிக்டாக்கை பிரதிபலிப்பதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்களைக் கொண்ட பிரபல மாடலான கைலி ஜென்னர் மற்றும் ஹாலிவுட் நடிகையான கிம் கர்தாஷியன் ஆகியோர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்களில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அம்சங்கள் டிக்-டாக்கை பிரதிபலிப்பதாக குற்றச்சாட்டியது பெரும் விவாதமாக மாறியது. இன்ஸ்டாகிராமில் போட்டோ ரீல்ஸ், ஸ்கிரீன் மாற்றம் உள்ளிட்ட புதிய அம்சங்களை கொண்டு வந்தது ஏராளமான யூஸர்களை கவராததோடு, டிக்-டாக்கை போல் இல்லாமல் இன்ஸ்டாகிராமாக மீண்டும் உருவாக்குங்கள் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.
இன்ஸ்டாகிராம் மீதான விமர்சனங்களுக்கு கடந்த வாரம் பதிலளித்த ஆடம் மொசெரி, இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதை யூஸர்கள் ஒரு சிறந்த அனுபவமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் பிரபலங்களின் விமர்சனங்கள் மற்றும் யூஸர்களின் பயன்பாடு குறைந்ததை அடுத்து Instagram சில புதிய பயன்பாட்டு அம்சங்களைத் திரும்பப் பெற்றுள்ளது.
Meta செய்தித் தொடர்பாளர் கூறுகையில், Metaக்கான Reelsன் முன்னணி சந்தைகளில் இந்தியாவும் ஒன்றாகும். ரீல்ஸ் வீடியோக்கள் எல்லை மீறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன. ஆனால் சில உலகளாவிலான வீடியோக்கள் ரீல்ஸ் மூலமாக இந்தியாவில் ட்ரெண்டாகின்றன. அதேபோல் இந்தியாவை சேர்ந்த சில வீடியோக்களும் உலக அளவில் ட்ரெண்டாகின்றன. உதாரணத்திற்கு மேற்கு வங்காளத்தில் உள்ள பீர்பூம் மாவட்டத்தில் ஒரு வேர்க்கடலை விற்பனையாளரால் பாடப்பட்ட ‘கச்சா பாதம்’ போன்ற வீடியோக்களை குறிப்பிடலாம்” என தெரிவித்துள்ளார்.