இந்தியாவில் பொருளாதார நெருக்கடிக்கு வாய்ப்பு இல்லை

0
342

அண்டை நாடுகளில் ஏற்பட்டதைப் போன்று, இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். எனினும், அமைச்சரின் பதில் திருப்தியளிக்கவில்லை என்று கூறி காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்ற வருகிறது. இதில், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றம் என அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், விலைவாசி உயர்வு தொடர்பாக அவையில் விவாதிக்க நேற்று அனுமதி வழங்கப்பட்டது. விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய காங்கிரஸ் எம்பி மணிஷ் திவாரி, அத்தியாவசிய பொருள்களின் பணவீக்க விகிதம் 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக கூறினார். பணமதிப்பிழப்புக்கு பின்னர் இந்தியாவின் பொருளாதாரம் கீழ் நோக்கிச் செல்வதாக கூறினார். விலைவாசி உயர்வு குறித்து தமிழில் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை கடந்த ஆட்சியுடன் ஒப்பிட்டார்.

திரிணமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ககோலி கோஷ் தஸ்திதார், அவையில் கத்தரிக்காயை கடித்துக் காண்பித்து, எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வால் மக்கள் காய்கறிகளை பச்சையாக உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து தமிழில் பேசிய கரூர் எம்.பி., ஜோதிமணி, ஏழைகள் தங்களது குழந்தைகளுக்கு பால் வாங்கிக் கொடுக்கக் கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஆதங்கம் தெரிவித்தார்.

விவாதங்களுக்குப் பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம், பெரும்பாலான நாடுகளைவிட இந்தியா சிறப்பான இடத்தில் இருப்பதாக தெரிவித்தார். இதற்கு மாநில அரசுகள் உதவியதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில் ஏற்பட்டதைப் போன்று இந்தியப் பொருளாதாரம் தேக்கமடைவதற்கோ, நெருக்கடிக்கு உள்ளாவதற்கோ வாய்ப்பு இல்லை என்று நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக தெரிவித்தார். கொரோனா இரண்டாவது அலை, ஒமைக்ரான், ரஷ்யா-உக்ரைன் போர் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் 7 சதவீதத்துக்கும் குறைவாகவே பணவீக்கம் இருப்பதாகவும், வங்கிகள் மீதான நெருக்கடி குறைவாகவே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால், நிதியமைச்சரின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன், தமிழகத்தில் தேர்தலுக்கு முன்னர், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை குறைப்போம் என்று தேர்தல் அறிக்கையில் திமுக கூறியதாக தெரிவித்தார். இதற்கு திமுக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், நிதியமைச்சருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. மத்திய அரசு வரியைக் குறைத்தபோதிலும், மாநில அரசுதான் வரியைக் குறைக்கவில்லை என்று நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார்.இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Previous articleசீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர் – பதற்றம் அதிகரிப்பு
Next articleசர்ச்சையில் சிக்கிய இன்ஸ்டாகிராம்… திடீரென எடுத்த அதிரடி முடிவு