ஆஸ்திரேலியாவில் இந்திய சமூகத்தை ஒன்றிணைக்கும் ஸ்ருதி அடிலெய்டு

0
311

ஸ்ருதி அடிலெய்டு கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக தெற்கு ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், பூர்வீக இந்திய பாரம்பரிய நடனம், கலை, கலாச்சாரம், சேவை மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றின் கீழ் நடத்திவரும் பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் இந்திய சமூகத்தை ஒன்றிணைக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற “பிரவாஹ்”, ஆஸ்திரேலியா-இந்தியா நடனம் மற்றும் இசை விழா, தெற்கு ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அனைத்து பாரம்பரிய நடனக் கலைஞர்களுக்கும் நடனமாடவும், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், பன்முக கலாச்சார ஒற்றுமையின் மகிழ்ச்சியை பரப்பவும் ஸ்ருதி அடிலெய்டு வாய்ப்பளித்துள்ளது. ஸ்ருதி அடிலெய்டின் பொருளாளர் ஸ்ரீராமா ஸ்ரீநிவாசன் கதை மற்றும் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட “பஷ்யதி” என்ற நாட்டிய நாடகம் தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து முக்கிய நடனப் பள்ளிகளோடு சுமார் 50 உள்ளூர் கலைஞர்களுடைய ஒத்துழைபின் மூலம், நடைபெற்றது.

இந்த ஆண்டுக்கான நாட்டிய நாடகத்தின் தலைப்பு “பஷ்யதி – தி லுக்” ஆகும். நடனப்பள்ளி ஆசிரியைகள் சங்கீதா வெங்கிட் (ஸ்ருதி அடிலெய்டின் செயலாளர்), ஸ்ரீஜி ஸ்ரீலக்ஷ்மி, அகிலா சசிதர் , வித்யா கார்த்திகேசு, சோமி லிண்ட்சே மற்றும் பல்வேறு கலைஞர்களால், இது நாட்டிய நாடகமாக அரங்கேற்றப்பட்டது. ஒரு பார்வையற்ற பெண்ணின் கதையைச் மையமாக கொண்ட இந்நாட்டிய நாடகம், அவள் வாழ்வில் பார்த்திராத உணர்ச்சிகளையும் வண்ணங்களையும் வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், வெளியில் உள்ள ஒரு உலகத்தைப் புரிந்துகொள்ளவும் அதை அவளுடைய உள் ஆன்மீகத்துடன் இணைக்கவும் காரணமாக அமையும் ஒரு சந்தர்ப்பத்தை உணர்த்தியது. “நாம் அனைவரும் முதிர்ச்சியின் பல்வேறு நிலைகளில் பலமுறை பார்வையற்றவர்களாக இருக்கிறோம். தத்துவக் கண்ணோட்டத்தில் பார்த்தால், நம்மில் பெரும்பாலோர் பார்வையற்றவர்கள். பார்க்கிறோம் ஆனால் பார்ப்பதில்லை. நாம் இன்னும் நமக்குள் பார்த்தால், பல உண்மைகளை காண்கிறோம்.

அந்த கட்டத்தில் நாம் கவனிப்பது நம் பார்வைக்கு அப்பாற்பட்டதாக இருப்பதால் நமக்கு உடல் கண் தேவையில்லை.” என்ற தத்துவதுடன் மேடையேறிய இந்த நாட்டிய நாடகம் ஆன்மீகத்தின் அடையாளமாக இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டியாக நிற்கிறது ஸ்ருதி இந்த நிகழ்வை நமது குழந்தைகள் மற்றும் இளைஞர்களுடைய திறமைகளை ஊக்குவிக்கவும், அவர்கள் இவற்றை, கற்றுக்கொள்வதற்கும், பாரம்பரிய இந்தியக் கலைகளை நிலைநிறுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் வாய்ப்புகளை வழங்கிவருவது சிறப்புக்குரியதாகும் . இந்த நாட்டிய நாடகம் பல்வேறு கலைஞர்களின் ஒத்துழைப்பின் சான்றாகும். இது கடுமையான பயிற்சியின் மூலம் மிகக் குறுகிய காலத்தில் அடிலெய்டின் பல கலைஞர்களின் கூட்டு முயற்சியால் ஒரு அற்புதமான நிகழ்ச்சியாக அமைந்தது. ஸ்ருதி அடிலெய்டு அனைத்து உள்ளூர் கலைஞர்களையும் ஒன்றிணைத்து, அவர்களுக்கு ஒரு தனித்துவமான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதோடு மட்டுமல்லாமல் இதுபோன்ற எதிர்கால ஒத்துழைப்பு முயற்சிகளுக்கும் வழி வகுத்துள்ளது. நம் முயற்சிகளை ஒன்றிணைத்தால் வெற்றி பெற்று மேலும் உயரங்களை எட்ட முடியும், என்பதை இந்த நிகழ்வு நிரூபிக்கிறது. இந்திய பாரம்பரிய கலை மற்றும் பன்முக கலாச்சார ஒற்றுமையை மேம்படுத்துவதற்காக ஸ்ருதி அடிலெய்டுக்கு ஆதரவளித்து, மகத்தான முயற்சியில் ஈடுபட்டு, முழு வெற்றிக்காக பாடுபடும் தெற்கு ஆஸ்திரேலியாவின் அனைத்து அற்புதமான கலைஞர்களுக்கும் ஸ்ருதி அடிலெய்டு நன்றி கூறுகிறது. போர்ட் அடிலெய்ட் என்பீல்ட் கவுன்சிலின் அதரவு மற்றும் பல தாராளமான ஸ்பான்சர்களுடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. மார்கெட்டிங் அதிகாரி பிரேமா ஸ்ரீராமா (மார்க்கெட்டிங் ஆபீசர்) விழாவின் தொகுப்பாளராக இந்த நிகழ்வை வெற்றிகரமாக தொகுத்து வழங்கினார். நிதி அதிகாரி டாக்டர். அசோக் மனோகரன், தலைவர் நாராயண ராய் தலைமையிலான ஸ்ருதி நிர்வாகக் குழு விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

Previous articleகாசா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்: தெருவில் நின்ற 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சோகம்
Next articleஇந்திய துணை ஜனாதிபதி தேர்தலில் ஜகதீப் தன்கர் வெற்றி