
சீனாவின் பல்வேறு மாகாணங்களில் மீண்டும் கோவிட்-19 பரவல் தீவிரமாகியுள்ளதால் அரசு கடும் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளது. அந்நாட்டின் சன்யா என்ற இடம் பிரசித்தி பெற்ற சுற்றுலத் தளமாகும். தெற்கு பகுதியில் உள்ள தீவு பிராந்தியமான இங்கு லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். எனவே இந்த இடத்தை சீனாவின் ஹவாஸ் என்று அழைப்பது வழக்கம்.
இந்த பிராந்தியத்தில் நேற்று 483 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியான நிலையில், அங்கு உடனடியாக லாக்டவுன் கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. அங்கு பயணம் வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் ஒரு வாரத்திற்குள் ஐந்து கோவிட் பரிசோதனை மேற்கொண்டு தொற்று பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். அதுவரை, சுற்றுலாவாசிகள் தங்கியிருக்கும் விடுதிகள் 50 சதவீத டிஸ்கவுன்ட் கட்டணத்தில் அவர்களை தங்க வைக்க வேண்டும் என அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சன்யா பகுதியில் உள்ள 80 ஆயிரம் சுற்றுலா பயணிகள் அடுத்த ஒரு வாரத்திற்கு வெளியேற முடியாத வகையில் சிக்கியுள்ளனர்.
உலகின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக சீனா உள்ளது. இந்நாட்டில் தான் 2019ஆம் ஆண்டு முதல்முதலாக கோவிட்-19 பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போது சீனாவில் கோவிட் பரவலை தடுக்க ஜீரோ கோவிட் பாலிசி(Zero Covid Policy) என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது.
அதன்படி, ஒன்று, இரண்டு பேருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டாலும், அந்நாட்டு அரசு ஒட்டுமொத்த நகரத்திற்கே லாக்டவுன் அறிவித்து, அனைவரையும் பரிசோதனை செய்து வருகிறது. இந்த நடைமுறையால் அந்நாட்டின் குடிமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர் எனவும், பொருளாதாரமும் பெரும் பாதிப்புக்குள்ளாகிறது எனவும் புகார் எழுந்து வருகிறது. கோவிட் முதல் அலையை சமாளித்து தப்பிய சீனா, தற்போது ஓமைக்ரான் அலையை சமாளிக்க முடியாமல் திணறிவருகிறது.
முதல் இரண்டு அலை காலத்தில் அங்கு சுற்றுலா, விமானப் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. 2022இல் தான் மெல்ல சுற்றுலா இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், உருமாறிய கோவிட் பரவல் சீனாவில் மீண்டும் அசாதாரண சூழலை உருவாக்கியுள்ளது.