உலகின் பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி (வயது 75) மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி விரிவுரை நிகழ்த்திக்கொண்டிருந்தபோது மேடையில் திடீரென ஏறிய நபர் சல்மானை கத்தியால் குத்தியுள்ளார். இதில், சல்மானின் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த சல்மானுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் 24 வயதான ஹடி மடர் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கழுத்து, வயிறு மற்றும் முகத்தில் சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் அதிக ரத்தத்தை இழந்த சல்மான் ருஷ்டிக்கு தற்போது செயற்கை சுவாசக்கருவியுடன் வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வருகிறார். பல மணி நேர சிசிச்சைக்கு பின் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான சல்மான் ருஷ்டிக்கு ஒரு கண் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ஒரு கண் பார்வையை ருஷ்டி இழக்க நேரிட்டுள்ளது என அவரது புத்தகத்தின் ஏஜெண்ட்டு தெரிவித்துள்ளார்.