இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்போரின் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதற்காக இலங்கையில் புலம்பெயர்ந்தோர் காரியாலயம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
நாட்டை மீட்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களில் ஒன்றாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், தற்போது அமுலில் உள்ள அவசரகாலச் சட்டத்தை இந்த வார இறுதிக்குள் நீக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாடு தற்போது ஸ்திரமான நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டிய தேவை இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜுலை 18ஆம் திகதி முதல், எதிர்வரும் 18ஆம் திகதிவரை அவசரகால சட்டம் ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டது.
இதற்கு, மனித உரிமைகள் ஆர்வலர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டனர்.
எவ்வாறிருப்பினும், கடந்த மாதம் 27ஆம் திகதி அவசரகால சட்டம் நாடாளுமன்றில் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இவ்வாறான பின்னணியில், கொழும்பில் உள்ள விருந்தகம் ஒன்றில் நேற்று நடைபெற்ற ‘தொழில்சார் வல்லுநர் சங்கங்களின் மாநாடு – 2022’ விருது வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, அவசரகாலச் சட்டத்தை இந்தவார இறுதிக்குள் நீக்கமுடியும் எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது, நாட்டைக் கட்டியெழுப்ப பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு தேவை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், சர்வதேச நாணய நிதியத்துடனான பணிக்குழாம்மட்ட ஒப்பந்தம் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளதாகவும், அந்த உடன்படிக்கை இலங்கைக்கு சிறந்த நம்பிக்கையைக் கொடுக்கும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.