ஒரு லட்சத்துக்கும் மேல் தினசரி கொரோனா பாதிப்பு.. புதிய அலை பீதியில் தென்கொரியா மக்கள்

0
202

தென்கொரியாவில் நேற்று ஒரே நாளில் 1,78,574 பேருக்கு புதிதாக கோவிட்-19 தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 633 பேர் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் நான்கு மாதங்கள் இல்லாத அளவில் 1,80,803 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவானது. தொடர்ந்து இரண்டு நாட்களாக ஒரு லட்சத்துக்கும் மேல் தினசரி பாதிப்பு பதிவாகியுள்ளதால், அங்கு புதிய கோவிட்-19 அலை ஏற்பட்டுள்ளதா என தென் கொரிய அரசு கண்காணித்து வருகிறது. அதேபோல், ஒமைக்ரான் போல் வேறு ஏதேனும் உருமாறிய தொற்று பரவல் உள்ளதா எனவும் சுகாதாரத்துறை நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.

அந்நாட்டின் சுகாதாரத்துறை புள்ளி விவரப்படி, அந்நாட்டில் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 2,18,61,296 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு நாளில் 61 கொரோனா உயிரிழப்பு பதிவான நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 25,813 ஆக அதிகரித்துள்ளது. 470 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போதைய நிலை தொடரும் பட்சத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை இம்மாத இறுதியில் 2 லட்சமாக உச்சம் தொடும் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். முகக்கவசம், தடுப்பூசி போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை, கோடை விடுமுறை நாள்கள், வானிலை நிலவரம் ஆகியவற்றை பொருத்து இந்த புதிய பரவலின் தாக்கம் மாறுபடும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தென்கொரியாவின் அண்டை நாடான வடகொரிய கடந்த வாரம் தான் தன்நாட்டில் கோவிட் பரவல் முற்றிலுமாக ஒழிந்துவிட்டது எனவும், அந்நாட்டில் விதிக்கப்பட்டிருந்த கோவிட் கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படுவதாக அறிவித்தது. அத்தோடு நிற்காமல், எங்கள் நாட்டில் கொரோனாவை பரப்பியது தென்கொரியா தான், அந்த நாட்டை சும்மா விடமாட்டோம் என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Previous articleகொரோனா அலை இன்னும் ஓயவில்லை, அதிகரிக்கும் இறப்பு விகிதம் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
Next articleமகன்களை தனியாக விட்டுவிட்டு நடிகையுடன் ஓட்டம் பிடித்த நடிகர் தனுஷ்