இலங்கையில் முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயாவை அணிந்துகொண்டு சுற்றி திரிந்து கொண்டிருந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி ரயில் நிலையத்தில் இவ்வாறு அலைந்து கொண்டிருந்த போது, அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளால் பிடித்து, காலி பொலிஸாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
காலி மக்ளுவவை வசிப்பிடமாகக் கொண்ட 27 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை ரயில் நிலையத்துக்கு வந்திருந்த அவ்விளைஞன், கொழும்புக்குச் செல்வதற்காக ரயில் பற்றுச்சீட்டை பெற்றுள்ளார்.
அவரது குரல் தொடர்பில் சந்தேகம் அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள், அவரை பின்தொடர்ந்து கண்காணித்துள்ளனர்.
எனினும், முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடையுடன் அலைந்து திரிபவர் ஆண்ணொருவர் என்பதை பாதுகாப்பு அதிகாரிகள் இனங்கண்டு கொண்டனர். அதன்பின்னர் அவரை பிடித்து விசாரணைக்கு உட்படுத்தினர்.
தன்னுடைய காதலி இன்னுமொருவருடன் தொடர்பில் இருக்கிறார் என கேள்விப்பட்டேன். அவ்விருவரும் காலி ரயில் நிலையத்துக்கு வருகின்றனர் என்றும் தகவல் கிடைத்தது. அதன்பின்னரே, இவ்வாறு முகத்தை மறைத்துக்கொண்டு, பெண்களின் உடையில் இங்கு வந்தேன் என தெரிவித்துள்ளார்.
அந்த அபாயா உடையானது, அவ்விளைஞனின் தாயுடையது என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. எனினும், அவ்விளைஞனை ரயில் பாதுகாப்பு அதிகாரிகள், பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.