அமெரிக்க சுற்றுலா விசா பெற குறைந்தபட்சம் 2024 வரை காத்திருக்க வேண்டும்- என்ன காரணம்?

0
152

அமெரிக்க சுற்றுலா விசாவை பெற விரும்புபவர்கள் அதற்காக 2024 ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்க சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பித்தால், குறைந்தபட்சம் 2024 மார்ச்-ஏப்ரல் மாதங்களில் மட்டுமே அவர்களுக்கு அனுமதி கிடைக்கும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்த ஆண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாட முடிவு செய்து அமெரிக்க தூதரகத்தின் வலைதளத்தை அணுகி சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவருக்கான நேர்காணல் தேதி மார்ச் 2024-ல் தான் கொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சுற்றுலா விசாவை பெறுவதற்கான சராசரி காத்திருப்பு காலம் தற்போது கொல்கத்தாவுக்கு 587 நாட்களாகவும், சென்னைக்கு 557 நாட்களாகவும், டெல்லிக்கு 581 நாட்களாகவும், மும்பைக்கு 517 நாட்களாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு மக்களின் பயண தேவை அதிகரித்துள்ளது. இதனால் ஏராளமானோர் விசாவிற்காக விண்ணப்பிக்கின்றனர். அதே நேரத்தில் கொரோனா தொற்றின் போது உருவாகிய தூதரக பணியாளர்களின் பற்றாக்குறை தற்போது விசா தாமதம் ஆவதற்கு முக்கிய காரணமாக கூறப்பட்டுள்ளது. இதனால் தூதரக அதிகாரிகளின் பணியமர்த்தலை அமெரிக்க வெளியுறவுத்துறை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.