ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத் தலைநகர் சிட்னியில் கடந்த சில நாட்களாக மழை தொடர்ச்சியாகப் பெய்துகொண்டிருக்கின்ற நிலையில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. வெள்ள அபாயம் இருப்பதால் அந்தப் பகுதியில் இருக்கும் குடியிருப்பாளர்களை வெளியேற்றுமாறு ஆஸ்திரேலிய அவசரச் சேவைகள் பிரிவு உத்தரவிட்டுள்ளது.
தாழ்வான நிலப்பகுதிகளில் இருக்கும் குடியிருப்புப் பேட்டைகளிலிருந்து குடியிருப்பாளர்களை வெளியேற்றுவது குறித்து பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் அங்கு வெள்ளத்திலிருந்து 28 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
சாலைகளின் வழியாகப் பயணம் செய்வது ஆபத்தானது என்றும் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருக்கிறது என்றும் நியூசௌத் வேல்ஸின் அவசரச் சேவைப் பிரிவு ஆணையர் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே மழைப்பொழிவு குறைந்துள்ள வேளையிலும், வெள்ள நீர் தொடர்ச்சியாக ஆறுகளில் சென்று கலப்பதாக மாநிலத்தின் வானிலை ஆய்வகம் தெரிவித்தது.