தமிழ் சினிமாவில் தீபாவளிக்கு வெளியாகும் புதிய படங்களால் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று திரையிடப்படும் பொன்னியின் செல்வன் நீக்கப்படுகிறது. இதனால் 100க்கும் மேற்பட்ட திரையரங்குக உரிமையாளர்கள் பாதிப்பை சந்திக்கின்றனர் என கூறப்படுகிறது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு கார்த்தி நடித்துள்ள சர்தார் மற்றும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றன.
இதில் சர்தார் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் நேரடியாக வெளியிடுகிறது. அதேபோல் பிரின்ஸ் திரைப்படத்தை மதுரை அன்புச் செழியன் வெளியிடுகிறார். ஆனால் இந்தப் படத்தையும் மறைமுகமாக ரெட் ஜெயன்ட் நிறுவனமே வெளியிடுகிறது என திரைத்துறையில் கூறுகின்றனர்.
இந்த இரண்டு திரைப்படங்களையும் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வெளியிட முயற்சிகள் நடைபெறுகின்றன. அதில் பெரும்பாலான திரையரங்குகளின் ஒப்பந்தமும் முடிவடைந்துள்ளது.
கடந்த 30ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழகத்தில் பெரும் வெற்றியடைந்தது. அந்த திரைப்படத்தையும் மறைமுகமாக ரெட் ஜெயின் நிறுவனமே வெளியிட்டு இருந்தது.
பொன்னியின் செல்வன் Distribution அடிப்படையில் வெளியிடப்பட்டது. அதற்காக வசூல் குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன்படி முதல் வாரம் திரையரங்க உரிமையாளர்களுக்கு 25 சதவீதம், விநியோகஸ்தருக்கு 75 சதவீதம். இரண்டாவது வாரம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு 30 சதவீதம் விநியோகஸ்தருக்கு 70 சதவீதம். மூன்றாவது வாரம் திரையரங்க உரிமையாளர்களுக்கு 35 சதவீதம் மற்றும் விநியோகஸ்தருக்கு 65 சதவீதம் என திரையிடப்பட்டது. அதேபோல் நான்காவது வாரத்தில் இருந்து திரையரங்கு உரிமையாளர்களுக்கு 40 சதவீதம் விநியோகஸ்தருக்கு 60 சதவீதம் என்ற அடிப்படையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பொன்னியின் செல்வன் திரையிடப்பட்டது. அந்த வகையில் தீபாவளி சமயம்தான் பொன்னியின் செல்வனின் நான்காவது வாரம். எனவே, தமிழகத்தில் உள்ள சுமார் 100 திரையரங்குகள் பொன்னியின் செல்வன் படத்தை திரையிட விருப்பம் தெரிவித்தனர். ஏனென்றால், அந்த வாரத்தில்தான் திரையரங்கு உரிமையாளர்களுக்கு அதிக பங்கு கிடைக்கும். இது லாபகரமாக இருக்கும் என எண்ணினர்.
ஆனால் தீபாவளிக்கு வெளியாகும் படங்களைதான் திரையிட வேண்டும் என சிலர் அழுத்தம் கொடுக்கின்றனர் என்று பெயர் கூற விரும்பாத சில திரையரங்கு உரிமையாளர்கள் கூறுகின்றனர். அத்துடன் அழுத்ததிற்கு உடன்பட்டு பெரும்பாலான திரையரங்குகள் தீபாவளி படங்களை ஒப்பந்தம் செய்துவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.