கட்டாரில் இடம்பெற்று வரும் உலகக் கிண்ண உதைபந்து திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
அந்தவகையில், நாளை நடைபெறவுள்ள 3-வது இடத்திற்கான போட்டியில் குரோசியா- மொராக்கோ அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
அத்தோடு, நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் பிரான்ஸ்- அர்ஜென்டினா அணிகள் மோதவுள்ளன.
அர்ஜென்டினா முதல் போட்டியில் சவுதி அரேபியாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. இதனால் கடும் விமர்சனத்திற்கு உள்ளான அந்த அணியின் தலைவர் மெஸ்சிக்கு இதுதான் கடைசி உலகக் கிண்ணம். இதற்கு முன் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் அர்ஜென்டினா இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்தது.
இதனால் மெஸ்சிக்கு உலகக் கிண்ணத்தை வெல்ல வாய்ப்பில்லை என கருதப்பட்டது. ஆனால், அதன்பின் மெஸ்சி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரது சிறப்பான விளையாட்டால் தற்போது அர்ஜென்டினா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
குரோசியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி மெஸ்சி கோல் அடித்தார். அதன்பின் அல்வாரெஸ் கோல் அடிக்க துணை புரிந்தார்.
இந்த போட்டியின்போது மெஸ்சி தசைப்பிடிப்பால் அவதிப்பட்டாராம். 100 சதவீதம் உடற்தகுதியுடன் இல்லையாம். இருந்தாலும் விளையாடுகிறேன் என மெஸ்சி தன்னம்பிக்கையுடன் விளையாடினாராம்.
தற்போது இடது காலில் தசைப்பிடிப்பு (hamstring) ஏற்பட்டதன் காரணமாக நேற்று நடைபெற்ற பயிற்சி போட்டில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார். இதனால் அர்ஜென்டினா அணி மெஸ்சி காயத்தால் கவலையடைந்துள்ளது.
ஒரு வேளை நாளைமறுதினம் பிரான்ஸ்க்கு எதிரான இறுதிப் போட்டியில் மெஸ்சி 100 சதவீத உடற்குதியுடன் விளையாடவில்லை என்றால், அது அர்ஜென்டினாவுக்கு மிகப்பெரிய இழப்பாகும் என்பதில் சந்தேகமில்லை.
டி மரியா அரையிறுதியில் காயம் காரணமாக விளையாடவில்லை. தற்போது அவர் உடற்தகுதி பெற்று விட்டதால் இறுதிப் போட்டியில விளையாட வாய்ப்புள்ளது.
இந்த உலகக் கிண்ணத்தில் மெஸ்சி 5 கோல் அடித்துள்ளார். 3 கோல் அடிக்க துணை புரிந்துள்ளார். அவருடன் எம்பாப்வேவும் 5 கோல் அடித்துள்ளார். இருவரும் இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி தமிழன்